பிறவாமையைப் பெறவிரும்புவோர் மனத்திலெழும் நினைவுகளை அறவே களையவேண்டும். மலர்ப்பதத்தினிலுருகவும் இனியருள்புரிவாயே:- உருகிய தங்கத்தில் இரத்தினமணி பதியும்; இளகிய சேற்றில் தாமரை மலரும்; கல்லின் மேல் தாமரை மலராது; அது போல் கருங்கல் போன்றகெட்டியான மனதில் இறைவன் திருவடித் தாமரை மலராது. கல்மனதில் இறைவன் பாதமணி பதியாது. “திணியானமனோ சிலைமீ துனதாள் அணியா ரரவிந்த மரும்புமதோ” - கந்தரநுபூதி. உருகிய உள்ளத்தில் இறைவன் திருவடிப் போது மலரும். அருள்பெற்ற ஆன்றோர்கள் அனைவரும் உள்ளம் உருகுதல் ஒன்றையே பெரிதும் பாராட்டுகின்றனர். “உருகுமடியவ ரிருவினையிருள் பொரும் உதயதினகர” -திருப்புகழ். “விரகறநோக்கியும் உருகியும் வாழ்த்தியும்” -திருப்புகழ். “உருகாமனமும் சிவஞானமுணரா அறிவும்” “கல்லேனு மையஒருகாலத்திலுருகுமென் கல் நெஞ்ச முருகவிலையே” -தாயுமானார். “தழலது கண்ட மெழுகது போலத் தொழுதுள முருகி யழுதுடல் கம்பித்து ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்” -போற்றித் திருவகவல். “கொடியேனாகிய அடியேன் இனிப்பிறவா நெறி பெற இனியேனும் திருவடியில் நெகிழ்ந்த நெஞ்சத்தை நல்கி யாட்கொள்வீர்” என்று சுவாமிகள் முறையிடுகின்றனர். கருத்துரை “அசுரகுலகாலரே! தணிகாசலரே! பல்கோடி பிறவி எடுத்த அடியேன் இனிப் பிறவாவகை யருள்புரிவீர். தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள் சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள் முழுமோசந் |