பக்கம் எண் :


346 திருப்புகழ் விரிவுரை

 

எதிர்த்த அவுணர்கள் இயமனுடைய நரகலோகஞ் சேர போர் புரிந்தவரும், சங்க சக்ரபாணியும், அழகரும், உலகையும் உலகிலுள்ள பொருள்களையும் திருவயிற்றில் அடக்கியவரும், நீண்ட திருவுருவுடையவரும் ஆகிய நாராயண மூர்த்தியின் மருகரே! கடல்கள் திடுக்கிடவும் சூராதி யவுணர்கள் மாய்ந்தொழியவும் குலாசங்கள் தூள்பட்டழியவும் தீயுமிழ்ந்த ஒளிவீசும் வேலாயுதத்தைத் திருத்தி விடுத்தருளி, ஒரு நொடிப் பொழுதுக்குள் உலகங்களை யெல்லாம் வலம் வந்த மயில்வாகனத்தை யுடையவருமாகிய வீரரே! தினைப்புனத்தில் இருந்தவரும் இரு தனபாரங்களை யுடையவரும் இளம் வயதுடையவரும் நலமிகுந்த குறமாதும் ஆகிய வள்ளி யம்மையாருடனும் புகழ் பெற திருத்தணி என்னுந் திருமலைமீது நிலைபெற்று வாழ்கின்ற பெருமிதமுடையவரே! தொட்டவுடன் அசைந்து குலுக்குபவரும், முறையற்ற எண்ணத்தினரும், காமத்தால் கண்கெட்ட அறிவிலிகளும், இள வயதுள்ளவரும், நில வெடிப்பினை யொத்தவரும், கேட்டைச் செய்கின்ற சிறுக்கிகளும், தந்திரவாதிகளும், பிணங்கிகளும், முழு மோச குணங்கள், திணித்த மட்டிகளும், கீழ்மையாளரும், அடிவண்டல் போன்றவரும், முழுப்புரட்டுகளைச் செய்பவரும், நழுவுபவரும், பொருளை யறுக்கின்ற நட்பையுடையவரும், விலை கூறு தனங்களின் வலையிற் புகாவாறு புலன்களைத் தடுத்தவர்களையுந் தமது வசப்படுத்தும் சரச வார்த்தைகளையுடையவரும், கலப்புடையவரும் ஆகிய விலைமாதர்கள் பவள நிறத்துடன் அருகில் வர அவர்களை அழைத்து, சக்கரவாள கிரியாற் சூழப்பட்ட மண்ணுலகில் அவர்களுடன் விளையாடி அவத்தையில் உண்மைகள் அழிபடுவதால், ஆணவ மலத்தை அருட்சக்தியால் விலக்குவித்து, ஒப்பற்ற ஞானவொளி வீச அருள்பதிவித்து உமது திருவடித் தாமரைகளிரண்டையும் அடியேனுக்குத் தந்தருளும் நாள் ஒன்று உளதாகுமோ?

விரிவுரை

தொடத்துளக்கிகள்:-

இப்பாடலில் உள்ள நிந்தனைகள் பொதுமகளிரைக் குறித்தன. குலமகளிரைக் குறித்ததன்று.

அடைத்தவர்க்கியல்..........விளையாடி:-

வலைபுகுதாமல் புலன்களை அடைத்தவர்க்கும் மயல் விளைப்பவர் என்பதில் அப்பொதுமகளிரின் ஆற்றலும் வெளிப்படுகின்றது. இவ்வாறே சுவாமிகள் பல இடங்களில் கூறுமாறு காண்க.