ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள மெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி யுடைத்து வானவர் சித்தர்து தித்திட விடும்வேலா உலுத்த ராவண னைச்சிர மிற்றிட வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன் உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் மருகோனே வலிக்க வேதனை குட்டிந டித்தொரு செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் குருநாதா வனத்தில் வாழும யிற்குல மொத்திடு குறத்தி யாரைம யக்கிய ணைத்துள மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய பெருமாளே. பதவுரை ஒலி பல் பேரிகை=ஒலிக்கின்ற பலவகையான பேரிகை வாத்தியங்களுடன், உக்ர அமர்க்களம் எதிர்த்து=கடுமையான போர்க்களத்தில் எதிர்த்து வந்த, சூரரை வெட்டி= சூராதியவுணர்களை வெட்டியழித்து, இருள் கிரி உடைத்து=இருள்மயமாய் நின்று மயக்கிய கிரவுஞ்ச மலையைப் பிளந்து, வானவர்=தேவர்களும், சித்தர்=சித்தர்களும், துதித்திட=துதிசெய்ய, விடும் வேலா=வேலாயுதத்தை விடுத்தவரே! உலுத்த ராவணனை சிரம் இற்றிட வதைத்து=ஆசையுடைய இராவணனுடைய சிரங்கள் அற்று விழுமாறு செய்து அவனை வதைத்து, மா பலியை சிறை வைத்தவன்=மகாபலிச் சக்கரவர்த்தியைச் சிறையில் வைத்தவரும், உலக்கை ராவி=உலக்கையை ராவி, நடுக்கடல் விட்டவன்= நடுச்சமுத்திரத்தில் எறிந்தவருமாகிய திருமாலின், மருகோனே=மருகரே! வலிக்க வேதனை குட்டி=தலையில் வலியுண்டாகுமாறு பிரமதேவனை குட்டியவரே! நடித்து= ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு நடனஞ் செய்தவரும், ஒரு சகத்தை ஈனவள்=ஒப்பற்ற உலகங்களை யீன்ற, பச்சை நிறத்தியை மணத்த=பச்சை நிறமுடைய பார்வதியம்மையை மணந்தவரும் ஆகிய, தாதை பரபிரமருக்கு அருள்=தந்தையாகிய பரப்பிரமப் பொருளாம் சிவபெருமானுக்கு உபதேசித்தருளிய, குருநாதா=குருநாதரே! வனத்தில் வாழும் மயில் குலம் ஒத்திடு=காட்டில் வாழும் மயிலினம் போன்ற, குறத்தியாரை=வள்ளி பிராட்டியாரை, மயக்கி அணைத்து=அன்பினால் மயக்குமாறு செய்து தழுவி, உளமகிழ்ச்சியோடு=திருவுள்ளத்தில் மகிழ்ச்சியுடன், திருத்தணி பற்றிய=திருத்தணிகை யம்பதியில் பற்று வைத்து எழுந்தருளிய, பெருமாளே=பெருமையின் மிக்கவரே! எலும்பு= எலும்பு, நாடிகள்=நாடிகள், அப்பு=நீர், இரத்தமொடு=இரத்தம், அழுக்கு மூளைகள்= அழுக்குள்ள மூளைகள், மச்சொடு கொள்புழு=இழிவைக்கொண்ட புழு, இருக்கும் வீடு= இவைகள் இருக்கும் வீடு, அதில் எத்தனை தத்துவம்=அந்த வீட்டில் எத்தனை தத்துவங்கள், சதிகாரர்=மோசக்காரர்கள், இறப்பர்=அநீதி |