பெருமாளே=பெருமையிற் சிறந்தவரே! ஒருபதும் இருபதும் அறுபதும் உடன் அறும்= ஒரு பத்தும் இருபதும் அறுபதும் அவையுடன் ஆறும் கூடிய தொண்ணூற்றாறு தத்துவங்களின், உணர்வு உற=உண்மையையுணர்ந்து, இதுபதம் உளம் நாடி=தேவரீருடைய இரண்டு திருவடிகளை உளத்தில் தியானித்து, உருகிட=அதனால் உள்ளம் உருக, முழுமதி தழல் என ஒளிதிகழ்=பூரண சந்திரனது தீப்போன்ற ஒளிவீசும், வெளியொடு ஒளிபெற விரவாதே=பரவெளியின் ஒளிபெறுமாறு அதில் அடியேன் கலந்து கொள்ளாமல், தெருவினில் மரம் என=தெருவில் மரம்போல் நின்று, எவரொடும் உரை செய்து திரிதொழில்=யாரோடும் பேசிப் பேசித் திரிகின்ற தொழிலை, அவம் அது புரியாதே=அடியேன் மேற்கொண்டு வீணாக அலையாது, திருமகள் மருவிய=இலட்சுமி தேவியின் புதல்வியாகிய வள்ளி நாயகி தழுவுகின்ற, திரள்புய=திரண்ட புயங்களை யுடையவரே! அறுமுக=ஆறுமுக சுவாமியே! தரிசனை பெற அருள் புரிவாயே=தேவரீரது அருட்காட்சி பெற அடியேனுக்கு அருள் புரிவீர். பொழிப்புரை அன்புடன் இனிய பழங்கள், கடலைகள், பயறு சிலவகையான பணியாரங்கள் இவைகளை உண்ணுகின்ற பெருவயிற்றினை யுடையவரும், பழமொழியான மகாபாரதத்தை எழுதியவருமாகிய கணபதியின் தம்பியே! பெரிய கிரவுஞ்சமலை ஊடுருவவும், அடியார்கள் உள்ளம் உருகவும், அவர்கள் பிறவிப் பிணி நீங்கவும் அருள் செய்கின்ற குமாரக் கடவுளே! பெண் யானையுடன் ஆண் யானைகள் உலாவவும், ஆண் மான்களுடன் பெண்மான்கள் விரும்பவும் விளங்குகின்ற, திருப்பருப்பதத்தில் வாழும் பெருமிதம் உடையவரே! தொண்ணூற்றாறு தத்துவங்களின் உண்மையை யுணர்ந்து, தேவரீருடைய திருவடியை உள்ளத்தில் தியானித்து உள்ளம் உருகவும், முழு நிலாவின் ஒளிபோல் திகழும் பரவெளியின் அருள் ஒளியைப் பெறவும் விரும்பாமல், வீதியில் மரம்போல் நின்றும் கண்டவருடன் பேசித் திரியும் பயனற்ற தொழிலைச் செய்யாமல் இலக்குமி தேவியின் புதல்வியாகிய வள்ளிபிராட்டி தழுவுகின்ற திரண்ட புயாசலங்களையுடையவரே! ஆறுமுகப் பெருமானே! உமது தரிசனையை அடியேன் பெறுமாறு திருவருள் புரியவேணும். விரிவுரை ஒருபது மிருபது மறுபது முடனறு முணர்வுற:- ஒருபது, இருபது, அறுபது, ஆறு (10+20+60+6) ஆக 96 தத்துவங்கள். தத்துவங்களின் தன்மையுணர்ந்து தத்துவ தரிசனை எனப்படும். |