பூமி தரிப்பர்:- தீவினை செய்து செய்து மேலும் மேலும் இம்மண்ணுலகிலேயே பிறப்பவர்கள். பிறப்புடன் இருப்பர்:- எடுத்த இப்பிறப்பினால் சிவகர்மம் புரிந்து பிறப்பை யொழிக்காமல் அவகன்மம் புரிந்து இந்த வுடம்புடனேயே இருப்பார்கள். வீடுகட்டி யலட்டுறு சமுசாரம் கெலிப்பர்:- ஆசை மேலீட்டினால் வீடுகள் பல புதுக்கி, இச்சமுசார வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். மால் வலைப் பட்டுறு துட்டர்கள்:- மால்-ஆசையினால் வரும் மயக்கம்; அந்த மயக்க வலையில் பட்டு உழல்கின்ற பொல்லாதவர். அழிப்பர்:- நீதி நெறிகளை அழிவு செய்வார்கள். மாதவ முற்று நினைக்கிலர்:- பெரிய தவநெறியை யடைந்து அதைச் சிறிதும் நினைக்காதவர்கள். கெடுப்பர் யாரையும்:- எல்லோருக்கும் தீங்கு செய்து அவர்களைக் கெடுப்பார்கள். மித்திர குத்திரர்:- மித்திரத்துரோகம் புரிபவர்; நம்பி நட்பு செய்த நண்பருக்குச் செய்யும் கெடுதல் கடவுளால் மன்னிக்க முடியாத பாவம். கொலைகாரர்:- ஆடு மாடு மீன் கோழி முதலிய சிற்றுயிர்களைக் கொன்று தின்று திரிகின்றவர்கள். கிருத்தர்:- தான் என்ற அகங்காரம் உடையவர்கள். கோளகர்:- சதா பிறரைப் பற்றிக் கோள் சொல்லிக் குடிகெடுப்போர்கள். |