எத்தனை வெப்பிணி:- இந்த வுடம்பில் பலவகையான கொடிய நோய்கள் குடியிருக்கின்றன. வீடதை நத்தி எடுத்திவண் உழல்வேனோ? இந்த சரீரத்தை விரும்பி விடாது எடுத்து இவ்வுலகில் அடியேன் உழலலாமோ? அவ்வாறு உழல்வது கூடாது முருகா. ஆதலால் இனி இந்த வுடம்பை எடுத்து உழலாத வண்ணம் அடியேனுக்கு அருள்புரிவாய். “விதிகாணும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்கழல் என்றருள்வாய்” -கந்தரநுபூதி. மாபலியைச் சிறை வைத்தவன்:- பிரகலாதருடைய மகன் விரோசனன் விரோசனனுடைய மகன் மகாபலிச் சக்ரவர்த்தி. அவன் பேராலேயே மகாபலி பெரிய ஆற்றல் படைத்தவன் என்பது விளங்குகின்றது அல்லவா? மாபலி மூன்று உலகங்களையும் வென்று, இந்திர வாழ்வையும் பெற்று, ஒப்பாரும் மிக்காருமின்றி வாழ்ந்தவன். அவனை அடக்கி இந்திரனுக்கு வாழ்வு தரும் பொருட்டு, திருமால் அதிதி வயிற்றில் வாமனனாகத் தோன்றி, மாவலி புரியும் யாகசாலையில் சென்று மூவடிமண் தானமாகக் கேட்டு, மண்ணும் விண்ணும் ஈரடியால் அளந்து, “மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?” என்றார். மாவலி “அடியேன் சிரம்” என்றான். திருவிக்கிரம மூர்த்தி மாவலியின் சிரத்தில் திருவடியை வைத்து அவனை அதல உலகத்தில் வைத்தருளினார். அவனுடைய வேண்டுகோளின்படி, வாசலில் காவல் புரிபவராகவும் நின்றார். உலக்கை ராவி நடுக்கடலிட்டவன்:- இரும்பு உலக்கையும், யாதவ குலமும் கண்ணபிரான் பாண்டவர்க்குத் துணையாக நின்று துரியோதனாதி குருகுலத்தையழித்தார். காந்தாரி கண்ணனைப் பார்த்து “கண்ணா! நீ என் குலத்தையழித்தனை. அது போல் உனது யதுகுலமும் 36வது ஆண்டில் ஒருங்கே அழியக் கடவது” என்றார். இந்தச் சாபத்தைக் கேட்ட கண்ணபிரான் புன்னகை புரிந்து, “அதுதான் என் கருத்தும்; அவ்வண்ணமே அழிவதாக” என்றார். ஏன்? பூபாரந் தீர்க்க வந்தவர். கொடுமையும் கோபமும் செருக்கும் படைத்தவர்களைப் பூமி தாங்க அஞ்சும். |