மகிழ்ச்சி பெறத் தமது பிளப்புள்ள வாயில், காலை உச்சி மாலை என்ற மூன்று வேளைகளிலும் ஒப்பற்ற செங்கழுநீரின் கட்டுள்ள மொட்டுக்கள் வாய்விரிந்து தேன் துளிகளைக் கொடுக்கும், செங்கழுநீர் சுனை சிறந்து விளங்கும் திருத்தணிகையில், விளக்கம் பொருந்த அத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமிதம் உடையவரே! திருட்டுப் பெண்கள், கூத்தாடும் பயனில்லாதவர்கள், பகையற்ற செருக்குடன் இனிது நடிப்பவர்கள், சிறப்புடன் தேகத்தைக் குலுக்கி, அப்படியும் இப்படியுமாக கண் வலையாலே மயக்குவித்து, உயிரைக் கரைத்து; மனத்தில் உள்ள இன்பத்தை ஓடிப் போகும்படிச் செய்து, மயக்கத்தைத் தருகின்ற கண் சிமிட்டலால் காம விழியால் உட்படும்படி அடியேன் அலையலாமோ? விரிவுரை திருட்டு நாரிகள்:- இத்திருப்புகழின் முதல் இரண்டு அடிகளில் விலை மகளிரைப் பற்றி அடிகளார் கூறுகின்றார். தம்மை நாடி வந்தவர்களிடம் உண்மையன்பு காட்டாது, மனத்தில் ஒன்றும் முகத்தில் ஒன்றுமாகக் கரவுடன் நடப்பார்கள். அதனால் அவர்கள் இருமனப் பெண்டிர் எனப்படுவார்கள். பப்பர மட்டைகள்:- பப்பரம்-ஒருவகை வரிக்கூத்து; மட்டை-பயனில்லாத பொருள். பிறவியெடுத்ததன் பயன் இன்னதென்று அறியாமல் வீணாக வாழ்பவர்கள். வறட்டு மோடியினித்த நடிப்பவர்:- வறட்டு-சாறு இல்லாதது. பொருளின்றிப் பேசுவதை “வறட்டு வார்த்தை” என்பார்கள். வறட்டு ஜம்பம் என்றுங் கூறுவர். கொடுமையை மறைத்து இனிமை போல் நடித்துப் பழகுவார்கள், சிறக்கு மேனி உலுக்கி:- மலரும், அணிகலன்களும் நிறைந்த அழகிய உடம்பு, மேலும் பளிச்சிடுமாறு குலுக்குவர். அதனால் அவர்களின் அழகு மிகும். ஒரு பொருள் அசைந்தால் அதன் அழகு அதிகப்படும். திருக்கோயில்களில் அலங்கரித்த உத்சவ மூர்த்தியை அப்படி சிறிது அசைப்பார்கள். அதற்கு வையாளி நடையென்று பேர். பூத்த மலர்க் கொம்பு அசைவதால் அழகு பெறும். |