பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 359

 

மடக்கு கண் வலையாலே:-

கண்கள் நீரில் பிறழும் சேல்மீன்போல் இப்படியும் அப்படியும் அசையுமாறுசெய்து இளைஞர்களை அக்கண் வலையால் பிடித்து வசப்படுத்துவார்கள்.வலையால் பறவைகளைப் பிடிப்பவர் காட்டில் வலை வைப்பார்கள். வேசையர்கள் கூந்தலாகிய அடர்ந்த காட்டிலே கண்ணாகிய வலையை வீசி இளைஞர்களின் உள்ளங்களாகிய பறவைகளைப் பற்றுவார்கள்.

       “திண்ணிய நெஞ்சப் பறவை சிக்கிக் குழற் காட்டில்
          கண்ணி வைப்பார் மாயங் கடக்கு நாள் எந்நாளோ”
                                                        -தாயுமானார்.

திகைத்துளாவி கரைத்து:-

ஆசை மிகுதியால் இளைஞர்கள் மனந்திகைப்புற்று காமாக்கினியால் உயிர் உருகி கரையுமாறு புரிவார்கள்.

மனத்தினில் இதத்தை ஓட விடுத்து:-

மனத்தினில் இன்பத்தை ஓடி ஒளியுமாறு விலக்குவர். ஆசை வயப்பட்டோர் துன்பம் அடைவார்கள் என்பது தேற்றம்.

மயக்கிடு சிமிட்டு:-

மயக்கு இடு சிமிட்டு கண்களை அப்படி ஒயிலாகச் சிமிட்டுவதனால் மயக்கத்தை வளர்ப்பார்கள்.

காம விதத்திலுமுட்பட அலைவேனோ:-

ஆசாபாசத்தில் உட்பட்டவர்கள் அலைவார்கள். “முருகா!  அவ்வண்ணம் ஆசையிற் சிக்கி அலைதல் முறையோ?  அடியேனை அவ்வாறு அலையாத வண்ணம் ஆட்கொள்வீர்” என்று சுவாமிகள் வேண்டுகின்றார்கள்.

தரித்து நீறு:-

திருநீற்றின் பெருமை

சிவபெருமான் திருநீறு தரித்து அருள் புரிகின்றார்.

    “நீறு தங்கிய திருநுதலானை”                 -சுந்தரர் தேவாரம்.

நீறு-வினைகளை நீறாக்குவது வடமொழியில் ‘பஸ்மம்’ என்று பேர். எல்லா சமயங்களுக்கும் உரியது திருநீறு.

   “சமயத்தில் உள்ளது நீறு”          -திருஞானசம்பந்தர்.