ஆன்ம தத்துவம் 24, வித்தியா தத்துவம் 7, சிவ தத்துவம் 5. ஆக 36. மண் நீர் தீ காற்று வெளி என்ற ஐம்பூதங்களின் தன்மைகள் ஐயைந்து 25, வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4 ஆக 60 ஆக மொத்தம் 96. இருபதம் உளநாடி:- நான் என்ற அகங்காரம் அற்ற இடம் ஒரு திருவடி; எனது என்ற மமகாரம் அற்ற இடம் ஒரு திருவடி. இந்த அகங்காரம் மமகாரம் அற்ற நிலையில் நிற்றலே திருவடித் தியானமாகும். உளநாடி உருகிட:- இறைவனை நினைந்து நினைந்து உள்ளம் அழலிடைப்பட்ட மெழுகுபோல் உருகுதல் வேண்டும். உள்ளம் உருகிய அடியார்களின் இருவினை இருளை முருகன் நீக்கி யருள் புரிவான் அன்றியும் அவர்கள் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றி வைப்பான். “உருகு மடியவர் இருவினை யிருள்பொரும் உதயதினகர இமனரன் வலம் வரும் உலக முழுதொரு நொடியினில் வலம்வரு பெருமாளே” -(பகிர நினைவொரு) திருப்புகழ் “மருகன் மறவாதவர் நினைப்பவை முடிக்குமவன் உருகு மடியார் இருவினைத் தொகையறுக்குமவன்” -பூதவேதாள வகுப்பு. முழுமதி தழலென ஒளிதிகழ் வெளியொடு ஒளிபெற:- சிவயோகத்தால் பிரமரந்திரங் கடந்து சென்ற இடத்தில் ஆயிரம் ஆயிரம் சந்திரர்கள் உதித்தாலன்ன தண்ணிய ஒளி திகழும். அந்த வெளியில் மகிழ்ந்து அருட்காட்சியில் திகழ்ந்து மகிழ்வார். “தங்கிய தலத்துணர்வு தந்தடிமை முத்திபெற சந்திர வெளிக்குவழி யருள்வாயே”
-(ஐங்கரனை) திருப்பகழ். “பலகோடி வெண்மதி போலவே வருவாயே” -(மதனேவிய) திருப்புகழ். |