நீறும், மார்பில் உருத்திராக்கமும், உள்ளத்தில் திருவைந்தெழுத்தும் திகழ வேண்டும். “நீறில்லா நெற்றி பாழ்” என்கின்றார் ஒளவையார். தீட்சை பெறாதார் இடுகின்ற மலர், முகவரி எழுதாத கடிதம் உரியவரிடம் சேராததுபோல், இறைவன்பால் சேராது அதனால் கண்ணபிரான் உபமன்யு முனிவரிடம் தீட்சைபற்று சிவபூசை செய்தார். அங்ஙனம் தீட்சை பெற்றுக்கொண்டோர், திருநீற்றை எடுத்து இட உள்ளங்கையில் வைத்து ஓம் என்ற பிரணவத்தை வலக்கை மோதிர விரலால் எழுதி, பஞ்சகலா மந்திரம், பஞ்சப் பிரம்ம மந்திரம், ஷடங்க மந்திரம் கூறியணிய வேண்டும், அதனால் அது மந்திர விபூதியாக ஆகின்றது. இதனை “மந்திரமாவது நீறு” என்ற தமிழ் மறையால் அறிக. நீர் இட்டுக் குழைத்து சிரசு, நெற்றி, மார்பு, நாபி, இரு முழந்தாள்கள், இரு முழங்கைகள், இரு மணிக்கட்டுகள், இரு தோள்கள், இரு விலா, முதுகு, கழுத்து ஆக இந்த பதினாறு அங்கங்களில் அணிந்து கையலம்பி, அந்த நீரை இடக்கையில் கும்ப முத்தரையாகப் பிடித்து, சிந்தும் நீரை, சம்மிதாமந்திரம் கூறி சிரசில் தெளித்துக் கொள்ள வேண்டும். இது மந்திரஸ்னானமாகும். “பிணியெலாம்வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்புமஞ்சேன் துணிநிலா அணியினான்றான் றொழும்பரோ டழுந்தியம்மால் திணிநிலம் பிளந்து காணாச் சேவடிபரவி வெண்ணீ(று) அணிகிலாதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே” என்று மாணிக்கவாசக சுவாமிகள் கூறுகின்றார். நோய்கட்கும், பிறப்பு இறப்பு என்ற பெருந் துயருக்கும் அஞ்சாத அப்பெருவீரர் வெண்ணீறணியாத பேதைகட்கு அஞ்சுகின்றார். “திருவெணீறிடாமூடர்” என்கிறார் அருணகிரி நாதர். பிதற்றிடு பித்தனும் :- இறைவன் பேசுவது வேதமேயாகும். “பேசுவதுந் திருவாயால் மறைபோலுங் காணேடீ” -திருவாசகம். |