பக்கம் எண் :


362 திருப்புகழ் விரிவுரை

 

ஆன்மாக்கள் செய்யும் பிழைகளைப் பொறுத்து அருள் புரிகின்ற பரமகருணையுடையவன் ஆதலின் பித்தன் எனப்பெற்றான். மகன்செய்த குற்றங்களை யெல்லாம் பொறுத்து வாழ்த்தும் தாயைக் கண்டு, “பெற்ற மனம் பித்து, பிள்ளைமனங் கல்லு” என்று கூறும் பழமொழியாலும் உணர்க.

இதத்து மாகுடிலைப் பொருள் , , , , , குருநாதா:-

சனகாதி முனிவர்கட்குக் கல்லாலின்புடையமர்ந்து எல்லாமாய் அல்லவுமாய் இருந்ததனை இருந்தபடி யிருந்து காட்டிச் சொல்லாமல் சொன்னவராகிய குருதட்சிணாமூர்த்தி, “சமர்த்தனே!  குழந்தாய்!  இனிய பிரணவப் பொருளைச் சொல்” என்று துதி செய்து கேட்டருளினார். ஆதலின் குருவுக்குங் குருவாதலின் ஆதிகுருப்புகழ் மேவுங் கொற்றவன் முருகன்.

சமப்ரவீண:-

சமப்ரவீணன்-நிபுணன். ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐம்பெருந் தொழில்களை விளையாட்டாக எளிதில் புரிகின்ற ஆற்றலுடையவன்.

மதித்திடு புத்தியில் இரக்கமாய் வருதற்பர:-

இறைவன் தன்னையுணர்ந்து உணர்வுமயமாய் நிற்கும் அடியவரது அறிவில் கலந்து விளங்குவான்.

  “கற்றிடும் அறியவர் புத்தியிலுறைபவ”            -திருப்புகழ்.

“அறிவொன் றறநின் றறிவா ரறிவில்
 பிறிவொன் றறநின் றபிரா னலையோ”                -அநுபூதி.

சகத்ரயோக:-

யோகத்தில பல வகையுண்டு. ஹடயோகம், ஆலம்ப யோகம், நிராலம்பயோகம், ஆதாரயோகம், நிராதாரயோகம், மந்திரயோகம், கர்மயோகம், பக்தியோகம், ராஜயோகம் என்பன வாதி அநேகம். இவற்றுக்கெல்லாம் மேலான சிவ யோகத்தினை உணர்த்தும் ஞானகுரு முருகன்.

தக்ஷிண குருநாதா:-

தென்னாட்டில் அப்பரமபதியாகிய முருகனையுணர்ந்து வழிபடுவார் பலர். அகத்தியர், சிகண்டி, நக்கீரர், அருணகிரிநாதர், குமரகுருபரர், சிதம்பர சுவாமிகள், இராமலிங்க அடிகள்,