பக்கம் எண் :


364 திருப்புகழ் விரிவுரை

 

மலையுச்சி்யில் வள்ளிபிராட்டியார் நீராடிய சூரியன் காணாத சுனையை இன்றுங் காணலாம். அருங்கோடையிலும் நீர் வற்றாதது. கோயில் குகைக் கோயில். வேறு எங்கும் இது போன்ற காட்சியைக் காண இயலாது. கணேசர் குண்டு, வள்ளியம்மையின் பரண் முதலிய சின்னங்கள் காண இருக்கின்றன, மலைவலம் வரலாம். முருகப் பெருமான் வேதங்களுங் காணாத திருவடி வைத்து உலாவிய அரிய பெரிய திருத்தலம்.

          “குறமறவர் கொடியடிகள் கூசாது போய் வருட
           கரடி புலி திரிகடிய வாரான கானில் மிகு
           குளிர்காணியி னிளமரம் தேயாகி நீடியுயர் குன்றுலாவி”
                                                 -(உறவின்முறை) திருப்புகழ்.

         “ஏறுழிபுலி கரடியரி கரிகடமை வருடை யுழை
          இரலைமரை இரவு பகல் இரைதேர் கடாடவியில்
          எயினரிடு மிதணதனில் இளகுதினை கிளிகடிய
          இனிதுபயில் சறுமிவளர் புனமீதுலாவுவதும்”
                                                     -சீர்பாத வகுப்பு.

      “சுனையோடருவித் துறையோடு பசுந்
          தினையோ டிதணோடு திரிந்தவனே”
      “வீடுஞ்சுரர் மாமுடிவேதமும் வெங்
          காடும் புனமுங் கமழுங் கழலே”               -கந்தரநுபூதி

இத் திருத்தலத்தில் ஆண்டுதோறும் தமிழாண்டின் இறுதி நாளன்று திருப்படிவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. ஞானத் தாயாக விளங்கும் எம்பிராட்டி வள்ளியம்மை அவதரித்த தலம். ஆதலால் எல்லோருக்குந் தாயுமாகவும் தலங்களின் நாயகமாகவும் விளங்குகின்ற இத்தலத்தை எல்லோரும் சென்று தரிசித்து இகபர நலன்களை எய்துதல் வேண்டும்.

இராய வேலூரிலிருந்து பஸ் வசதியுண்டு.

வேலூர் வள்ளி மணாளன் திருப்புகழ்ப் பாராயண சபையார்கள் இராஜகோபுரம் புதுக்கியும் திருப்படிகள் அமைத்தும், வள்ளிநாயகியின் ஆலயத்தைப் புதுப்பித்தும், இன்னும் பல அரிய திருத்தொண்டுகள் புரிந்து வருவது பாராட்டுதற்குரியது.

தனிமையும் இனிமையும் அமைந்த இத் திருத்தலத்தில சென்று இருந்தால் மனோலயந் தானே வரும்.

இங்கு சென்று அறம்புரிவோர்க்கு ஒன்றுக்குக் கோடியாகப் புண்ணியம் பெருகும். வினை கருகும்.