கலந்த வண்ணத்தில் இருக்க வேண்டும். தாமரை அத்தகைய நிறமுள்ளது. “சாரஸதள நயனா” என்பார் தியாகப் பிரும்மம். முல்லை நகையாலும்:- முல்லையரம்பு போன்ற வெண்மையும் கூர்மையும் வரிசையும் உடைய பற்கள் சிறிது தெரியுமாறு புன்னகை புரிந்து ஆடவர் உள்ளத்தைக் கொல்வர் பொது மகளிர். அல்லல்பட ஆசைக்கடலீயும்:- பெருந்துயரத்தையடையுமாறு, ஆசையைக் கடல்போல் பெரிய அளவில் தந்து வருத்துவார்கள். அள்ளஇனிதாகி நள்ளிரவுபோலு முள்ள வினையார்:- பொதுமகளிருடைய உள்ளமும் செயலும் நடு இரவின் கரிய இருள் போன்றது, பயங்கரமானது. நடு இரவின் கரிய இருள் அள்ளி யெடுக்கலாம் என்ற அளவுக்குத் திண்ணியதாக இருக்கும். மாதர்களின் உள்ளத்தை இருளென உவமிக்கின்றார் சேக்கிழார் பெருமாள். பஞ்சின் மெல்லடிப் பாவையர் உள்ளமும் வஞ்ச மாக்கள்தம் வல்வினை யும்அரன் அஞ்செழுத்தும் உணரா அறிவிலோர் நெஞ்சும் என்ன இருண்டது நீண்டவான். நடு இரவில் இருளை இளையான்குடிமாற நாயனாரது புராணத்தில் சேக்கிழாரடிகள் மிக அழகாகக் கூறுவதையும் ஈண்டு கண்டு மகிழ்க. பெருகு வானம் பிறங்க மழைபொழிந் தருகு நாப்பண் அறிவருங் கங்கல்தான் கருகு மையிருளின் கணம் கட்டுவிட்டு உருகு கின்றது போன்ற துலகெலாம். தனமாரும் இல்லுமிளையோரு மெல்ல அயலாக:- உயிர் பிரிந்தவுடன் செல்வமும் வீடும் மனைவி மக்களும் நமக்கு அயலாகி விடுகின்றன. வாழ்நாள் முழுவதும் இரவு பகலாக வுழைத்தும் அறநெறி நீங்கியுந் தேடிச் செல்வத்தைச் சேமித்து வைக்கின்றார்கள். |