பக்கம் எண் :


368 திருப்புகழ் விரிவுரை

 

அதியற்புதமாக மாளிகையைப் புதுக்குகின்றார்கள். மனைவி மக்கள் பொருட்டே உழைக்கின்றார்கள்.

அப்படிப் பாடுபட்ட ஒருவன் ஒரு கணத்தில் மாள்கின்றான். மாண்டவன் எதிர் வீட்டில் ஒருவண்டி யிழுக்கின்றவனுக்கு மகனாகப் பிறக்கின்றான். பிறந்த அவனுக்குத் தான் தேடிய பொன்னும் புதுக்கிய மாளிகையும், அருமையாகத் தொகுத்து வைத்த பொருள்களும் சொந்தம் என்று சொல்ல முடியுமா?  இது என் வீடு, இவள் என் மனைவி, இவன் என் மகன் என்று கூறினால் அவனுக்கு என்ன கிடைக்கும்?  உதைதான் கிடைக்கும். ஒரு விநாடியில் அத்தனையும் அயலாகி விடுகின்றன. இதனை யறியாது மாந்தர் மதியிழந்து கதியிழந்து உழல்கின்றார்கள். என்னே பேதைமை?

  “தமமரு மமரு மனையுமினிய தனமு மரசும் அயலாகத்
   தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே”
                                                    -திருப்புகழ்.

  இல்லும் பொருளும் இருந்த மனையளவே
      சொல்லும் அயலார் துடிப்பளவே-நல்ல
      கிளைகுளத்து நீரளவே கிற்றியே நெஞ்சே
      வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.
                 -(11ம் திருமுறை) ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

சமனாரும் எள்ளி யெனதாவி கொள்ளை கொளுநாளில் உய்யஒரு பொற் கழல்தாராய்:-

சமன்-இயமன், கீழோர் மேலோர், அரசன், ஆண்டி, இளைஞன், முதியவன், மணமகன், கற்றவன், மற்றவன் என்று பாராது ஆயுள் முடிந்தது என்றவுடன் சமமாகப் பார்த்து சிவந்து உயிரைக் கவர்வான். அதனால் சமன் என்ற பெயர் உண்டாயிற்று.

எள்ளி-இகழ்ந்து. இயமன் ஆயுள் முடிந்தவுடன் வந்து இகழ்ந்து உயிரைக் கவர்ந்து போவான்.

அவனுடைய வாகனமாகிய எருமை மிகவும் வலிமையும் வேகமும் உடையது. மாயஞ்செய்து உயிரைப் பிடிப்பான், அதனால்,

           “வல்லெருமை மாயச் சமனார்”

என்றார்.