பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 369

 

“அவ்வாறு அந்தகன் வந்து எந்தன் உயிரைப் பற்றும் போது, முருகா!  நீ வந்து அடிமையாகிய என்னைக் காத்து உன் திருவடித் தாமரையைத் தந்தருள்” என்று சுவாமிகள் வேண்டுகின்றார்.

தொல்லைமறை தேடி யில்லை யெனுநாதர்:-

தொல்லை-பழமை. வேதம் அநாதி, சுயம்பு. அது இறைவன் அருளிச் செய்தது. அந்த வேதங்கள் தேடியும் இறைவனைக் காணாது முறையிடுகின்றன.

     “வான்காணா மறைகாணா மலரோன் காணான்
               மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
      நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று
               நல்லோர்கள் நவில்கின்ற நலமே”

என்கிறார் இராமலிங்க அடிகளார்.

      உருத்திரர்நா ரணர்பிரமர் விண்ணோர் வேந்தர்
               உறுகருடர்காந்தருவர் இயக்கர் பூதர்
      மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை
                வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக்
      கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங்
                களைவினவ மற்றவையுங் காணேம் என்று
      வருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற
                வஞ்சவெளி யேயின்ப மயமாந்தேவே.
                                                 -திருவருட்பா

  “வேதங்கிடந்து தடுமாறும்”

என்கின்றார் பரஞ்சோதி முனிவர்.

துள்ளி விளையாடு புள்ளியுழை நாண வெள்ளி வனம்:-

மான் துள்ளித் துள்ளி விளையாடும் இயல்புடையது; அதனால் பெண்கட்கு உவமை கூறப்படுவது.

அத்தகைய சிறந்த புள்ளி மானும் தன் அழகுக்கு நிகராக மாட்டாது நாணுகின்றது. அதனால் அந்த மானை எள்ளிநகை செய்கின்றார் வள்ளி பிராட்டியார். எள்ளி-இகழ்கின்றவள்.

வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ:-

அசுரர்கள் வல்லவர்; அமரர்கள் நல்லவர்கள். நல்லவர்கள் வாழும்பொருட்டு வல்லவரை வேலால் குமாரக் கடவுள் மாய்த்தருளினார்.