தெருவினில் மரமென எவரொடும் உரை செய்து திரிதொழில் அவமது புரியாதே:- மரம் தன்னையும் அறியாது. தன்னை வைத்தவன் யார்? தண்ணீர் வார்த்து வளர்க்கின்றவன் யார்? என்பதையும் அறியாது நிற்கும். அதுபோல், ஆன்ம இலக்கணம் யாது? ஆன்மாவாகிய நமக்குத் தலைவன் யாவன்? அப்பரமனி யடையும் வழி யாது? உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பனவற்றையுணராது, நடக்கின்ற மரம் போல் திரிந்து, கண்ட மக்களுடன் வீண் பேச்சுக்களைப் பேசி அவத்தொழில் புரிகின்றனர். திருமகள் மருவிய:- திரு-இலக்குமிதேவி. இலக்குமியின் புதல்வி வள்ளி நாயகி. திருமாலின் கண்மலரில் பிறந்த சுந்தரவல்லி, முருகவேளின் கட்டளைப்படி தொண்டை நன்நாட்டில் வள்ளிமலையில் தவஞ் செய்துகொண்டிருந்தார். அங்கு நாராயணர் சிவ முனிவராகப் பிறந்து தவஞ் செய்து கொண்டிருந்தார். மகாலட்சுமியே மானாக வந்து உலாவினாள். அம் மானை அம் மாதவர் விரும்பி நோக்கினார். அம் மான் வயிற்றில் சுந்தரவல்லி கருவாகி, வள்ளிக்குழியில் பிறந்தாள். வள்ளிக் குழியில் பிறந்தபடியால் வள்ளி யென்ற நாமம் பெற்றாள். திருமாலின் அவதாரமாகிய உபேந்திரன் நம்பியாகப் பிறந்தான். நம்பிராஜன் வள்ளிக் குழியில் கிடந்து அழுது கொண்டிருந்த வள்ளி பிராட்டியைக் கொண்டுபோய் இனிது வளர்த்தான். பரிவுடன் அழகிய பழமொடு:- பரிவு-அன்பு. அன்புடன் அடியார்கள் நிவேதிக்கின்ற நல்ல கனிகளை கணபதி உண்டு அவர்கட்கு அருள் புரிவார். கடலைகள்:- நிலக்கடலை, வேர்க்கடலை, குண்டுக்கடலை என்ற பலவகையான கடலைகள். அன்றி, கடலை கள் எனப் பதச்சேதம் புரிந்து, கடலையும், கள்- தேனையும் என்றும் பொருள் கொள்ளலாம். பெறுவயிறுடையவர்:- அகில உலகங்களையும் தமது வயிற்றினுள் அடக்கியவர் என்ற குறிப்பை விநாயகருடைய பெருவயிறு உணர்த்துகின்றது. |