பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 371

 

பதவுரை

மெய்ய=மெய்ப்பொருளே! பொழில்நீடு, தையலை=சோலையில் வாழ்ந்த வள்ளியம்மையை, மு நாலு செய்ய புயம் மீது உற்று அணைவோனே=சிவந்த பன்னிரு புயங்களால் நெருங்கித் தழுவியவரே! வெள்ளை இபம் ஏறு=வெள்ளை யானைமீது ஏறுகின்ற, வள்ளல் கிளை வாழ=வள்ளலாகிய இந்திரனுடைய சுற்றத்தவராகிய தேவர்கள் வாழும் பொருட்டு, வெள்ளம்=சமுத்திரத்தில், முது மாவை பொருதோனே=முதிய மாமரமாக நின்ற சூரபன்மனுடன் போர்புரிந்தவரே! வையம் முழுது ஆளும் ஐய=உலக முழுவதும் ஆளுகின்ற தலைவரே! மயில் வீர=மயில்மீது வருகின்ற வீரமூர்த்தியே! வல்ல=திருவல்லம் என்ற தலத்தில் வாழும், முருகா=முருகப் பெருமானே! முத்தமிழ் வேளே=இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ்த் தெய்வமாக விளங்கும் செவ்வேட்பரமரே! வள்ளிபடர் சாரல்=வள்ளிக் கொடி படர்கின்ற சாரலுடன் திகழும், வள்ளி மலை மேவு=வள்ளி மலையில் வீற்றிருக்கும், வள்ளி மணவாள=வள்ளி நாயகரே! பெருமாளே=பெருமையின் மிகுந்தவரே! ஐயும்=கோழையும், உறுநோயும்=சேரும் நோய்களும், மையலும்=மோக மயக்கமும், அவாவின் ஐவரும்=ஆசையைத் தூண்டுகின்ற மெய் வாய் கண் நாசி செவி என்ற ஐந்து பொறிகளும், உபாயம்=அவைகளின் சூழ்ச்சிகளும், பல நூலின்=பலகலைகளும் ஆகிய இந்த, அள்ளல் கடவாது=சேற்றினைத் தாண்டாது, துள்ளி அதில் பாயும்=குறித்து அவைகட்கு உட்பட்டு இறந்து போகின்ற, உள்ளமும்=மனதும், இல் வாழ்வை கருது ஆசை=மனை வாழ்க்கையையே விரும்புகின்ற ஆசையும், பொய்யும்=பொய்யும், அகலாத மெய்யை வளர் ஆவி உய்யும் வகை=நீங்காத இந்த உடம்பை வளர்க்கின்ற உயிரானது உய்யும்படியான, யோகத்து அணுகாதே=சிவயோகத்தை அடியேன் மேற் கொள்ளாமல், புல் அறிவு பேசி=இழிவான அறிவுப் பேச்சுக்களைப் பேசி, அல்லல் படுவோனை=துன்பத்தை அடைகின்ற அடியேனை, நல்ல இரு தாளில் புணர்வாயே= பிறவித்துயரைத் தீர்க்கும் உமது திருவடியிற் சேர்ந்தருளுவீராக.

பொழிப்புரை

மெய்ப் பொருளே! நீண்ட சோலையில் வாழ்ந்த வள்ளி பிராட்டியாரைச் சிவந்த பன்னிரு புயங்களாலும் தழுவுபவரே! வெள்ளையானை மீது ஏறுகின்ற வள்ளலாகிய இந்திரனுடைய சுற்றத்தவராகிய அமரர்கள் வாழும்பொருட்டு, கடலில் மாமரமாக நின்ற சூரபன்மனுடன் போர் செய்தவரே! உலக முழுவதும் ஆள்கின்ற தலைவரே! மயில் வீரரே! திருவல்லத்தில் உறைகின்ற முருகக் கடவுளே! முத்தமிழ்த் தெய்வமாகிய செவ்வேட் பரமரே! வள்ளிக்கொடி படர்கின்ற வள்ளிமலையில் வாழ்கின்ற வள்ளி நாயகரே! பெருமிதம் உடையவரே! கோழையும், நோய்களும், மோக மயக்கமும், ஆசையைத் தூண்டுகின்ற ஐம்பொறிகளும், அவைகளின் சூழ்ச்சிகளும், பல கலைகளும் ஆகிய இந்தச்