சேற்றினைக் கடக்க மாட்டாது, துள்ளி அதில் வீழ்ந்து மாய்ந்து போகின்ற உள்ளமும், மனை வாழ்க்கையையே விரும்புகின்ற ஆசையும் பொய்யும் நீங்காத இந்த உடலை வளர்க்கின்ற உயிர் உய்யும்படியான சிவ யோகத்தை மேற்கொள்ளாமல், புன்மைஆன அறிவினால் வீண் வார்த்தைகளைப் பேசித் துயரப்படுகின்ற அடியேனை பிறவித் துயரை யொழிக்கும் உமது பாதமலரிற் சேர்த்து ஆண்டருள்வீராக. விரிவுரை ஐயும்:- ஐ-கோழை. ஐயினால் மிடறு அடைப்புண்டு” -அப்பர். ஐயுந் தொடர்ந்து விழியுஞ் செருகி அறிவழிந்து மெய்யும் பொய்யாகி விழுகின்ற போதொன்று வேண்டுவல்யான் செய்யுந் திருவொற்றி யூரிடை யீர் திருநீறும் இட்டுக் கையுந் தொழப்பண்ணி ஐந்தெழுத் தோதவுங் கற்பியுமே. -பட்டினத்தார். உறுநோயும்:- இந்த உடம்பு பல்வேறு நோய்கட்கு இடமாயது. “பல நோயும் நிலுவை கண்டது” -(முனையழிந்தது) திருப்புகழ். மையலும்:- ஆசையால் கோபமும், கோபத்தால் மயக்கமும் வரும். மயக்கத்தால் செய்வன தவிர்வன உணர முடியாத நிலைமையேற்படும். காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடும் நோய் -திருக்குறள். அவாவின் ஐவரும்:- ஐவர்-மெய் வாய் கண் நாசி செவி என்ற ஐம்பொறிகள். இந்த ஐம்பொறிகளும் அவாவை அதிகரிக்கச் செய்யும். கண்-கண்ட பொருள்களை விரும்பச் செய்யும். வாய்- சுவையான உணவை விரும்பச் செய்யும். நாசி- நறுமணத்தையும், செவி-இனிய மொழிகளையும் பாடல்களையும் விரும்பும். |