பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 373

 

       “மெய்வாய் விழி நாசி யொடுஞ் செவியாம்
          ஐவாய் வழி செல்லும் அவாவினையே”       -கந்தரநுபூதி.

உபாயம்:-

ஆசையினால் பல சூழ்ச்சிகள் செய்ய நேரும்.

பல நூலின்:-

கல்வியும் கவலை தருவதுதான். அதனால்தான் மாணிக்க வாசகர்,

       “கல்வி யென்னும் பல்கடல் பிழைத்தும்”

       “கற்பனவும் இனிமையும்”

என்று அருளிச் செய்தார்.

அள்ளல் கடவாது:-

அள்ளல்-சேறு. இந்தத் துன்பமாகிய சேற்றைக் கடவாது ஆன்மாக்கள் அதில் வீழ்ந்து மாய்கின்றன.

                     “பிரபஞ்சமென்னும்
      சேற்றைக் கழிய வழிவிட்டவா”           -கந்தரலங்காரம்.

உள்ளமுமில் வாழ்வைக் கருதாசைப் பொய்யுமகலாத மெய்:-

மெய்-உடம்பு. இந்த உடம்பு மனம் ஆசை முதலியவற்றுக்கு இடமாய் நிற்பது.

உய்யும் வகை யோகத்தணுகாதே:-

உயிர்க்கும் உய்யும் நெறி யோக நெறியாகும்.

அருணகிரியார் சிவராஜ யோகத்தைப் பற்றி திருப்புகழில் பலமுறை விளக்கஞ் செய்கின்றார்.

புல்லறிவு பேசி அல்லல்படுவேனை:-

புல்லறிவினால் வீண் வார்த்தைகளைச் சதா பேசிப் பலர் அல்லல்படுகின்றார்கள்.

       பயனில் சொல் பாராட்டுவானை மகன்எனல்
      மக்கட் பதடி யெனல்.                     -திருக்குறள்.