பக்கம் எண் :


376 திருப்புகழ் விரிவுரை

 

ஐந்துகர விநாயகருக்குக் கனியைத் தந்த தந்தையாராகிய சிவபெருமானுக்கு உண்மை நிறைந்த நீதியான உபதேசத்தைச் செய்த பெரியவரே! வள்ளிக்கொடிகள் நிரம்பவும் அடர்ந்து படர்ந்த வள்ளிமலையின் மீது சென்று வள்ளி நாயகி மீது விருப்பங்கொண்ட பெருமிதமுடையவரே! ஒழுக்க நெறியை யறிந்து அதன்படி வாழும் மெய்வாழ்வைத் துறந்து, பொய் வாழ்வைக் கண்டு அதில் மோகங்கொண்டு, கல்லைப்போல் கடினமும் வஞ்சகமும் உடைய நெஞ்சத்தராகிய பொருட் பெண்டிர்மேல் விழுந்து, கள்ளத்தனம் உடைய கொங்கைகளின் மேற் பொருந்தி, உய்யும் வழியிற் சேராது, வஞ்சகருடனும், தந்திரஞ் செய்யும் பொய்யருடனும் கலந்து அயர்ந்து உள்ளம் உடைந்த நாயினேனுக்கு, உள்ளத்தின் பேறாக நின்று சொர்வடையாமல் நிலைத்த மனோலயந்தருவதான ஒரு உபதேசமொழியை உபதேசிக்க மாட்டீரோ!

விரிவுரை

கையொத்து வாழும் இந்த மெய்யொத்த வாழ்விகந்து:-

கை-ஒழுக்கம். ஒழுக்க நெறியை மேற்கொண்டு வாழும் மெய் வாழ்வை விடுத்து பொய் வாழ்வையடுத்து மாந்தர் மதிமயங்கிக் கெடுகின்றார்கள். உண்மை வாழ்வில் எப்போதும் மனதில் சாந்தியிருக்கும். பொய் வாழ்வில் சதா சஞ்சலந்தான் இருக்கும்.

கல்லுக்கு நேரும் வஞ்ச உள்ளத்தார்:-

பொது மகளிரது நெஞ்சம் வஞ்சனை நிறைந்தது. கல்லைப் போல் இரக்கமற்று கடினமாக இருக்கும்.

பாலைவனத்தின் வறட்சியைக் கூற வந்த கம்பநாடர்,

       “பொன்விலைப் பாவையர் மனமும்போல் பசையுமற்றதே”

என்கின்றார்.

உய்யப்படாமல் நின்று:-

உய்யும் வழியை யறியாது நிற்பர் அறிவிலிகள். பக்தி, சீலம், தியானம். வழிபாடு, ஆலய சேவை இவைகள் உய்யும் நெறி. இவற்றைக் கருதாமல், களியாட்டம் சூது வாது வஞ்சனைகள் செய்து கெட்டலைந்து அரிய வாணாளை வீணாளாக்கி மாய்கின்றார்கள்.

       கல்லார் சிவகதை நல்லோர் தமக்குக் கனவிலும் பொய்
       சொல்லார் பசித்தவர்க் கன்னங் கொடார்குரு சொன்னபடி