பக்கம் எண் :


38 திருப்புகழ் விரிவுரை

 

பழமொழி எழுதிய கணபதி:-

பழமொழி-மகாபாரதம். வியாச முனிவர் பாட உலகம் உய்யும் பொருட்டு விநாயகமூர்த்தி வடமேருகிரியில் தமது கோட்டினால் எழுதியருளினார்.

“இலகுகடலைகற் கண்டு தேனொடும்
      இரதமுறு நினைப் பிண்டி பாகுடன்
      இனிமையி னுகருற் றெம்பிரா னொரு        கொம்பினலே
   எழுதென மொழியப் பண்டுபாரதம்
      வடகன சிகரச் சொம்பொன் மேருவில்
      எழுதிய பவளக் குன்று”
                                     -(அலகிலவுணரை) திருப்புகழ்.

அடியார்களுடைய உடற்பிணிகளையும் உயிர்ப்பிணிகளையும் பிறவி நோயையும் அகற்றும் மருத்துவ மன்னர் முருகவேள். அதனால்,

“பரரோக வயித்தியநாதப் பெருமாளே”

என்கின்றார் திருத்தணித் திருப்புகழில்.

திருமலை:-

திருமலை என்பது திருப்பருப்பதம் என்ற திருத்தலம். இது ஸ்ரீசைலம் எனவும் வழங்கும். அரிய திருத்தலம். சிலாதனர் செய்த வேள்வியில் திருநந்திதேவர், திரு அவதாரம் புரிந்த இடம். இங்குள்ள சுவாமி மல்லிகார்ச்சுனர். பன்னிரு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்று. ஸ்ரீசைலத்தின் சிகரத்தைத் தரிசித்தவர்க்கு மறுபிறப்பு இல்லை என்று சிவாகமம் கூறுகின்றது.

“ஸ்ரீசைல சிகரம் த்ருஷ்ட்வா புனர்ஜன்ம நவித்யதே”

மிகுந்த புண்ணியம் புரிந்தவர்க்கே இத்திருத்தலத்தைத் தரிசிக்கும் பேறு கிடைக்கும். மூவர் தேவாரங்களும் பெற்றது.

கருத்துரை

திருப்பருப்பதம் மேவிய திருமுருகா! உமது தரிசனையைத் தந்து அருள்வாய்.