பக்கம் எண் :


380 திருப்புகழ் விரிவுரை

 

ஞான எல்லையையும், வேத மந்திரத்தால் உம்மைத் தொழுது வணங்கும் எல்லையையும் விலகித் தாண்டி, உமது அருள் பாலிக்குந் திருப்பேரை இகழ்ந்து உள்ளத்தில் இரக்க உணர்ச்சியற்ற கீழ்மக்களுடைய இணக்கத்தை அடியேன் விடமாட்டேனோ?

விரிவுரை

இத்திருப்புகழில் தீயோர் இணக்கத்தை விடவேண்டும் என்று அடிகளார் முருகனிடம் முறையிடுகின்றார்.

முல்லைக்கு:-

முல்லை மலர் மன்மதனுடைய கணை.

மாரனங்கை வில்லுக்கும்:-

மாரன்-மன்மதங் கரும்பு வில்லால் மக்களின் மனதில் விருப்பத்தை விளைவிப்பவன்.

மாதர் தங்கள் பல்லுக்கும்:-

பொதுமகளிர் பல்லைக்காட்டி நகைத்து மயக்குவர்.

வாடியின்ப முயலா:-

காம வேட்கையால் மனிதர் வாட்டத்தை யடைந்து மீட்டும்மீட்டும் சிறிய இன்பத்தையே பெறுவதற்கு முயன்று துன்புறுவர்.

நீள் முள்ளுற்ற கால்மடிந்து:-

நீண்ட முள்தைத்த கால்போல் மடிந்து ஒடிந்து வேதனைப் படுவார்.

கொள்ளிக்குள் மூழ்கிவெந்து:-

காமாக்கினியால் உள்ளமும் உண்ர்வும் வெந்து துன்புறுவர்.

நெருப்பு நெருங்கியவரை மட்டுமே சுடவல்லது. காமத் தீ நீருள் குளிப்பினும் சுடும். குன்றேறி ஒளிப்பினும் சுடும். நெருப்பு உடம்பை மட்டுமே சுடவல்லது. காமத்தீ உள்ளம் உணர்வு உயிர் முதலிய அனைத்தையும் சுடுங் கொடுமையது.

பள்ளத்தில் வீழ்வதன்றி:-

ஆசைவயப்பட்டோர் பாவப் படுகுழியில் வீழ்ந்து பதை பதைப்பார்கள். அதினின்றும் ஏறுவது அரிது.