மெள்ளச் சரோருகங்கள் பயில் நாதா:- சரவணப் பொய்கை கங்கையாற்றின் ஒரு புடை விளங்குவது. பொய்கை-இயற்கையாயமைந்த நீர்நிலை. தடாகம்-செயற்கையாகத் தடுத்து உண்டாக்கியது. கங்கையாறு சேறில்லாதது. ஆதலால் “அள்ளற்படாத கங்கை” என்றார். தெய்வீகமாய சரவணப் பொய்கையில் எம்பிரான் தெய்வத் தாமரை மலர்மீது எழுந்தருளினார். “வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந்தருளினானே” -கந்தபுராணம். “உதயரவி வர்க்க நிகர் வனகிரண விர்த்தவித முடையசத பத்ரநவ பீடத்து வாழ்பவனும்” -வேடிச்சி காவலன் வகுப்பு. வல்லைக்குமார:- வல்லக்கோட்டை என்ற திருத்தலம். கோடை நகர் என விளங்குகின்றது. இது சிங்கப் பெருமாள் கொயிலுக்கு வடமேற்கில் 10 கல் தொலைவில் உள்ள அருமையான க்ஷேத்திரம். மல்லுப்பொ ராறிண்டு புயவீரா:- இறைவனுடைய புயம் வீரம் நிறைந்தது. அதனால் “ஆரிருதடந்தோள் வாழ்க” என்றார் கச்சியப்பர். “எதிர்படு நெடிய தருவடு பெரிய கடாமுமிழ் நாகமேக மிடிபட மற்பொரு திண்சிலம் படங்க மோதிப்பிடுங்கின “ “அநுபவ னநக னனனிய னமல னமோகன நேக னேக னபிநவ னித்திய னஞ்சலென் ப்ரசண்ட வாகைப்புயங்களே” -புயவகுப்பு. கருத்துரை வள்ளிமலையப்பனே! தீயவர் நட்பு தீர அருள் செய்வீர். |