பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 385

 

தொள்ளைப் புலால் பை:-

தொள்ளை-ஓட்டை. ஒன்பது ஓட்டைகளை யுடைய இறைச்சிப் பை.

துள்ளிக்கனார் கயவு கோப கள் வைத்த தோற்பை:-

துள் இக்கனார்; இக்கன்-கரும்பன் கரும்புவில்லையுடைய மன்மதன். மன்மதன் ஆன்மாக்களை மயக்கும் பொருட்டு துள்ளுவான்.

      “துள்ளுமதவேள் கைக் கணையாலே”         -திருப்புகழ்.

மன்மதனால் தளர்வு கோபம் முதலிய கள்ளை வைத்த தோற்பை.

கள்-மயக்கத்தைத் தரும். கோபமும் மயக்கத்தைத் தரும்.

      “கள்வைத்த தோற்பை சுமவாதே” -(ககனமும்) திருப்புகழ்.

பொள்ளுற்ற காற்பை:-

பொள்ளென வேகமாகச் செல்லும் தசவாயுக்கள் குடிகொண்டிருக்கின்ற பை.

“காயமேயிது பொய்யடா. காற்றடைத்த பையடா” என்பது சித்தர்வாக்கு.

கொள்ளைத் துராற்பை:-

துரால்-செத்தை. யமன் கொள்ளையடித்துக் கொண்டு போகின்ற செத்தை போன்ற உதவாத பை.

பசுபாச அள்ளற்பை:-

பசு-ஆன்மா. பாசம்-ஆணவம் மலம். இவைகட்கு இடமாய சோற்றுப்பை. அள்ளல்-சேறு.

மாற்பை:-

மால்-மயக்கம். மயக்கத்துக்கு இடமான பை.

ஞெள்ளற்பை:-

ஞெள்ளல்-தவறு. தவறுகட்கு இடமாய பை.

சீப்பை:-

சீ-சீழ்; சீ ஒழுகும் பை.

      “தோலெலும்பு சீநரம்பு பீளைதுன்று கோழை பொங்கு
          சோரிபிண்ட மாயுருண்டு                வடிவான      தூலம்”
                                                                     -திருப்புகழ்.