வெள்ளிட்ட சாப் பிசித மீரல்:- பிசிதம்-இறைச்சி. சுவாக்கள்-நாய்கள். சள்ளிட்டிழா:- நாய்கள் சள்ளென்று குலைத்துக்கொண்டு வந்து இழுத்துச் செல்லும் உடம்பு. பல் கொள்ளப்படாக்கை:- பல்லால் கடித்து நாய்கள் தின்னும் உடம்பு. ஆக்கை தவிரேனோ? இத்தகைய இழிந்த உடம்பின் மீதுள்ள பற்றை விட வேண்டும். தாயுமானார் இந்த உடம்பைப்பற்றிக் கூறும் இனிய பாடலை இங்கு நினைவு கூர்தல் வேண்டும். காகமொடு கழு கலகைநாய் நரிகள் கற்று சோறிடு துருத்தியைக் காலிரண்டு நவ வாசல பெற்றுவளர் காமவேள நடன சாலையை மோக ஆசைமுறி யிட்ட பெட்டியை மும் மல மிகுந் தொழுகு கேணியை மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை முடங்கலார்க்கிடை சரக்கினை மாக இந்த்ரதநு மின்னை யொத்திலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்யதடி காரனானயமன் வந்த டிக்குமொரு மட்கலத் தேகமான பொயை மெய்யெனக் கருதி ஐய வைய மிசை வாடவோ? திரிவதற்கரிய பிரமமே! அமல சிற்சுகோதய விலாசமே! பிறப்பை ஒழிக்கும் உபாயங்கள் இவையெனக் கூறுகின்றார் குருஞான சம்பந்தர். அவற்றுள் உடலைப் பழித்தல் ஒன்று எனக் குறிப்பிடுகின்றார். |