உணவுக் கவலை; பொருட் கவலை; மனைவி மகளால் கவலை, அரசினராற் கவலை; நோய் முதலியவற்றால் கவலை. இவ்வாறு பல கவலைகள். அல்லற் படாக்கை:- அல்லல்படு ஆக்கை. பல துயரத்தால் சோர்வு படுகின்ற உடம்பு. நல்லிற் பொறாச் சமயமாறின்:- நல்வழியில் சேராத ஆரு சமயங்கள் இவை புறச் சமயங்கள். பல்லத்த மார்க்கர் வல்லர்க்கர் மூர்க்கர்:- அத்தம்-பொருள். ஒன்றோடொன்று ஒவ்வாது முரண்படுகின்ற பொருள்களைக் கூறும் சமய மார்க்கம். அதனைப் பின்பற்றுகின்ற, இரக்கமற்ற அரக்கரைப் போன்ற மூர்க்கர்கள். கல்விக் கலாத்தலையலாமோ:- கலாம்-கலகம். கல்வியின் பயன் மனம் அடங்குவதேயாகும். அப்படியின்றி கற்ற கல்வியைக் கொண்டு தர்க்கமிட்டு, ஒருவருடன் ஒருவர் வாதிட்டுக் கெடுகின்ற தன்மையை ஒழிக்க வேண்டும். “கலகலகலெனக் கண்ட பேரொடு கிலுகிடு சமயப் பங்கவாதிகள் கதறிய வெகு சொற் பங்கமாகிய பொங்களாவும் கலைகளும் மொழிய -(அலகிலவு) திருப்புகழ். சமய வாதிகளைப் பற்றி சுவாமிகள் பல இடங்களில் கண்டிக்கின்றார். அல்லைகொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து சொல் குக்குடம்:- தலைவனைப் பிரிந்திருக்கின்ற தலைவிக்கு இராப்பொழுது பெருந் துயரத்தைக் கொடுக்கும். ஒரு இரவு ஒரு யுகம் போலிருக்கும். இந்தப் பாழும் இரவு விடியாதோ? சூரியனைக் கடல் விழுங்கிவிட்டதோ? என்று கூறிப் புலம்புவாள். |