“ஆதலால் அல்லை கொல் வார்த்தை சொல்” என்றார். இரவு ஒழியாதோ என்று சொல்லுகின்றவள். ஒரு தலைவி கூறுகின்றாள். ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ? நான் வளர்த்த கோழிவாய் மண்கூறு கொண்டதோ? - ஊழி திரண்டதோ? கங்குல் தினகரனுந் தேரும் உருண்டதோ பாதாளத் துள். இவ்வாறு இரவு நீடித்துத் தவிக்கின்ற தலைவிக்குக் கோழி உபகாரமாகச் சூரிய உதயத்தைப் புலப்படுத்தக் கூவும். சேவலின் குரலைக் கேட்டு அவள் சிறிது ஆறுதல் அடைவாள். ஆதலால் துன்பப்படுகின்ற ஒரு பெண்ணுக்கு உதவி செய்கின்ற சேவலை முருகர் ஆவலுடன் கொடியாகக் கொண்டார். இனி, ஆணவ இருளில் கிடந்து தத்தளிக்கின்ற ஆன்மாவுக்கு ஞானக் கதிரோனாகிய சிவசோதியின் வடிவையுணர்த்தும் நாததத்துவம் சேவல். இத ஒத்து-இதமாக ஒத்து. ஒத்து என்ற சொல் சந்தத்துக்காக நீட்டல் விகாரம் பெற்றது. அல்லுக்கு மாற்றினெல்லுக்குமேற்புல் கெல்லைப்படாக் கருணைவேளே:- அல்-இரவு. எல்-பகல். இங்கு இரவு பகல் என்றது மறப்பும் நினைப்புமாகும். இது கேவலசகலம். இந்த இரண்டும் அற்ற இடமே சதானந்தம். “கருதா மறவா நெறிகாண எனக் கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்” -கந்தரநுபூதி. இரவும் பகலும் அற்ற தூய இடத்தில் பொருந்தி முருகவேள் விளங்குகின்றார். அவர் அளவுபடுத்த முடியாத தயாசாகரம். இரவுபக லற்றஇடத் தேகாந்த யோகம் வரவுந் திருக்கருணை வையாய் பராபரமே. -தாயுமானார். “இராப்பகலற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே” -கந்தரலங்காரம். “அந்தி பகலற்ற நினைவருள்வாய்” -(ஐங்கரனை) திருப்புகழ். |