நோக்கும்=அகக் கன் பார்வையால் பார்க்கும், அறிவு ஊறி=சிவஞான ஊற்று பெருகி நோக்க அருள்வாயே= பார்த்து மகிழ அருள்புரிவீர். பொழிப்புரை கஸ்தூரி மணங்கமழ்கின்றதும் நன்றாக மலர்ந்து விளங்குவதுமாகிய வெண்டாமரை நடுவில் வீற்றிருக்கும் வெண்ணிறமுடைய கலைமகளின் கணவராகிய பிரமதேவரால் காண மாட்டாதவரும், ஆலாலவிடத்தைக் கண்டத்தில் தரித்தவரும், வளைந்த சடைமுடியில் ஆயிரமுகங்களையுடைய கங்கா நதியை ஏற்றவரும் ஆகிய சிவபெருமானுடைய திருப்புதல்வரே! மகிழ மரமும், குவிந்த அரும்புகளையுடைய சுரபுன்னை மரங்களும் மிகுந்துள்ள தினைப்புனங்களோடு கூடிய வள்ளிக் கொடி படர்ந்துள்ள வள்ளி மலையில் வாழ்கின்றவரும், வனவேடர் மரபில் வந்தவரும், மரகதவண்ண முடையவருமாகிய வள்ளி பிராட்டியாருக்கு மிகப் பொருத்தமாக வாய்த்த பெருமிதமுடையவரே! வான், காற்று, தீ, நீர், மண் என்ற ஐம்பூதங்களின் பரிணாமத்தாலாகியதும், துர்நாற்றம் மறைந்திருப்பதும், புழுக்களுக்கு உறைவிடமும், நெருப்புப்பொறி பறக்கப் பேசும் கோபமும் மதமும் நிறைந்து, அதனால் வரும் மயக்கம் என்னும் கள் வைத்த தோற் பையுமாகிய இவ்வசேதன உடம்பை இனி நான் சுமந்து அயராவண்ணம், யுக குடிவிலும் முடி பாத ஒப்பற்ற பரம்பொருளும் ஞானவொளி வீசுவதும், அருவாகவும் உருவாகவும் விளங்குவதென்று கூறும் மறைகளின் முடிவில் திகழ்வதுமாகிய செம்பொருளாகிய தேவரீரை உள்ளக் கண்ணால் காணும் ஞானஊற்று சுரக்கத் தரிசித்து உய்வுபெற அருள் புரிவீராக. விரிவுரை ககனமும்..........நிலமமை:- இவ்வுடல் மண் நீர் நெருப்பு காற்று வெலி என்ற ஐம்பூதங்களின் பரிமாணமாகும். உலகம், நிலம், பயிர் முதலிய விளக்கம் சிவபெருமான் உலகங்கட்கெல்லாம் ஏகநாயகன். உலகமெல்லாம் அவருடைய நிலம். பிரமர் பயிர் செய்யுங் களமர். அவர் சிவபெருமான் ஏவலின்படி உலகமென்னும் வயலில் சராசரங்களாகிய விதைகளை இட்டு, தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, விலங்கு, மனிதர், தேவர் ஆகிய பயிரை வளர்த்தனர். திருமகள் கொழுநராகிய திருமால் அப்பயிரைக் காத்தனர். விளைவு முற்றியபின், கூற்றுவன் என்னும் |