பணியாள் வந்து ஊனுடம்பை மாற்றி உயிர் என்னும் நெற்குவியலை, பூதசாரதநு என்னும் வண்டியில் ஏற்றிப் பொன்னுலகத்திற்கும், பூதமகாதநு, என்னும் வண்டியிலேற்றி மண்ணுலகத்திற்கும் அனுப்புகின்றனன். அவற்றுள் ஒரு சில உயிர்களுக்கு இருவினையொப்பு மலபரிபாகமுற இறைவன் தனது திருவடியிற் சேர்த்து அத்துவிதானந்த முத்தியைத் தருகின்றான். அதனை உற்று நோக்கில் அரசன் ஆறிலொரு கடமைபெறும் முறைமை போல் விளங்குகின்றது. இந்தக் கருத்தை திருக்கழுமல மும்மணிக் கோவையில் நமது பட்டினத்துப் பிள்ளையார் திறம்பட நமக்கு அறிவிக்கின்றனர். அதனை படித்தின்புறுக. “பெரும்புகழ்க் காழி விரும்பு சங்கரனே ஏந்தெழிற் புவன வேந்தநீ யாதலின் வளமலி நான்முகக் களமரு னேவலின் உரம்பெறு குலவரைக் குறும்பகப் பட்ட மண்டலம் என்னுங் கண்டநீள் வயலுட் சராசரத் தொகுதி விராயவித் திட்டுப் பாதவ மிருகம் பறவை மானிடர் ஆதிப் பைங்கூ ழமைத்தனர்; நிற்ப மாவுறை மருமக் காவலாளர் முற்றியபின் புரிபயன் பெறுவா னரிதர வியற்றி மெய்வலிக் கூற்றுவக் கைவினை மாக்களிற் புலாலுடை யாக்கைப் பலாலம தகற்றி அற்றமில் உயிரெனப் பெற்ற நெல்திறனைப் பூதசாரத் தநு பூதம காதநு பூத பரிணாமம் புகலுற யாக்கை மூவகைப் பண்டியின் மேவற ஏற்றிப் பொன்னிலம் நிரயம் இந்நிலம் என்னும் இடந்தொறும் ஆங்கவை அடங்கவைத்தற்றுள் ஒருசில வற்றைநின் திருவடி வீட்டிற் சேர்த்தனை யன்னது கூர்த்து நோக்கில் அரசு கொள்கடமை ஆறிலொன் றென்னும் புரைதீர் முறைமை புதுக்கினை போலும்; அதனால் மாசுக நீயுறும் வண்மை பேசுக கருணைப் பெரிய நாயகனே”. “வானப் புக்குப் பற்று மருத்துக் கனல்மேவு மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப் பிறவாதே” -திருப்புகழ். |