கள்ளப்புலால் க்ருமிவீடு:- புலால்-தீய நாற்றம். அது மறைந்திருப்பதால் “கள்ளப் புலால்” என்றனர். புழுக்கள் பல உள்ளே நெறிவதால் “க்ருமி வீடு” என்றனர். “புழுக்கொள் மலக்குகை வீடு கட்டியி ருக்குமெ னக்குநி னருள்தாராய்” -(ஆலம்வைத்து) திருப்புகழ். யுக இறுதிகளிலும் இறுதியில் ஒரு பொருள்:- உலகமழியும் காலத்தை யுகம் என்பர். அப்படி பல முறை உலகமழிந்து தோன்றும். அதனால் “யுக இறுதிகள்’ என்று பன்மையாகக் கூறினார். அப்பொழுதும் அழியாத அநாதி மூலமாகிய பரம்பொருள் முருகவேள். உள்ளக்க ணோக்கும்:- புறக்கண்ணால் கண்டு மகிழ்வதினும் அகக்கண்ணால் கண்டு மகிழ்வதுவே பரமானந்தம். “முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு காண்பதே யானந்தம்” -திருமூலர். வெள்ளைப் பிராட்டி இறைகாணா:- கலைமகளுக்குத் தலைவனாகிய பிரமதேவரால் சிவபெருமான் காணப்படாதவர். கலையறிவினால் காணப்படாதவர் என்பது கருத்து. வெள்ளத்தை யேற்ற பதி:- உமாதேவியார் சிவபெருமானுடைய கண்களை மூடிய பொழுது உலகமெல்லாம் இருண்டுவிட்டது. அப்பொழுது உமையம்மையார் வெரூஉக் கொண்டனர். அதனால் திருக்கரப் பெருவிரலில் சிறு வேர்வைத் துளி உண்டாயிற்று. அது வெள்ளமாகப் பெருகி உலகையெல்லாம் அழிக்கத் தொடங்கிற்று. அதனால் உலகம் கலங்கியது. அப்பெரு வெள்ளத்தைச் சிவபெருமான் சடாமுடியில் ஏற்று உலகைக் காத்தருளினார். மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி சலமுகத்தா லவன்சடையிற் பாயுமது என்னேடீ சலமுகத்தா லவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணி யெல்லாம் பில முகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. -திருவாசகம். |