வள்ளிக் குலாத்திகிரி:- வள்ளிக்குல திகிரி எனப் பிரிக்க; குலத்திகிரி என்பது குலாத்திகிரி எனத் திரிந்தது. சிறந்த வள்ளிமலை என்பது பொருள். (இது திரு வ. சு. செங்கல்வராயப் பிள்ளையவர்கள் குறிப்புரை) வள்ளிக்கொடி மிகுதியாக உள்ளமையால் வள்ளிமலை யெனப் பேருண்டாயிற்று. வள்ளியம்மையார் திருவவதாரஞ் செய்த மலை. இது தொண்டை நாட்டில், திருவலம் என்ற இரயில்வே ஸ்டேஷனுக்கு வடக்கே 8 மைலில் உள்ளது. இத்தலம் மிகப் புனிதமானது. அம்மையார் பொருட்டு முருகவேள் வந்து பலகாலம் உலாவியது. வேதாகமங்களால் காண முடியாத வேற்பிரான் விரைமலரடிபடும் பெரும்பேறு செய்தது. இயற்கை வளங்குன்றாதது. அங்குள்ள மக்கள் இன்றைக்குங் கள்ளங் கபட மற்றவர்கள். “சுனையோ டருவித் துறையோடுபசுந் தினையோ டிதணோடு திரிந்தவனே” “வீடும்சுரர் மாமுடி வேதமும்வெங் காடும் புனமுங் கமழுங் கழலே” -அநுபூதி. “இமையவர் முடித்தொகையும் வனசரர் பொருப்பும் என திதயமு மணக்குமிரு பாதச் சரோருகனும்” -வேடிச்சிகாவலன் வகுப்பு. “எறுழிபுலி கரடியரி கரிகடமை வரடையுழ யிரலைமரை யிரவுபகல் இரைதேர்க டாடவியில் எயினரிடு மிதணதனில் இளகுதினை கிளிகடிய இனிதுபயில் சிறுமிவளர் புனமீ துலாவுவதும்” -சீர்பாதவகுப்பு. கருத்துரை சிவ குமாரரே! வள்ளி மணவாளரே! புன்புலால் யாக்கையைச் சுமந்து அயராமல் தேவரீரை உள்ளக் கண்ணால் கண்டு உய்ய அருள்வீர். அல்லசல டைந்த வில்லடல னங்கன் அல்லிமல ரம்பு தனையேவ அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற லையமுடு கிண்ட அணையூடே |