பக்கம் எண் :


4 திருப்புகழ் விரிவுரை

 

இறைவன் தியானத்தினாலுண்டாகும் ஒப்பில்லாத சிவ அமுது நாவிற்கும், கண்ணிற்கும், காதுக்கும், பிற உறுப்புகட்கும் உள்ளத்திலும் உணர்விலும் உயிரிலும் கலந்து தெவிட்டாத இனிமையைத் தந்து பிறவி நோயையும் போக்கும்.

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை
விரும்புங் குமரனை மெய்யன்பினால் மெல்ல மெல்லவுள்ள
அரும்புந் தனிப்பர மானந்தந் தித்தித் தறித்தவன்றே      கரும்புந்
துவர்த்துச் செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே.
                                                கந்தரலங்காரம்.

தீதும் பிடித்த வினை:-

தீதும் என்றதில் வந்த உம்மை எச்சவும்மை. அதனால் நன்மையும் என வருவித்துப் பொருள் கூறப்பட்டது. நல்வினை தீவினை இரண்டுங்கெட்டாலன்றி பிறவி யறாது. நல்வினை பொன்னாற் செய்த விலங்காகும். தீவினை இரும்பாற் செய்த விலங்கு போலும். விலங்கு என்னுந் தன்மையால் இரண்டும் ஒன்றுதானே? ஆதலால் இரு வினையும் அறவேண்டும்.

“இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
   ஏகபோகமாய் நீயு நானுமாய்
   இறுகும்வகை பரம சுகம் அதனையருள்வாய்”
                                            -(அறுகுநுனி) திருப்புகழ்.

சீவன் சிவச்சொரூபம்:-

சீவன் சிவன் எனத் தெளிதல் என்றதனல் சீவனே சிவன் என எண்ணி பாழ்ங்குழம்பியில் விழக்கூடாது. சீவன் சிற்றறிவும் சிறுதொழிலும் மலப்பிணிப்பு முடையது. சிவம் பேரறிவும் பேராற்றலும் மலரகிதமும் உடையது. எனவே சீவனைச் சிவனாக எண்ணுவது பொருந்தாது. பின் அதன் கருத்து என்னையோவென ஆராயின், சிவோகம் பாவனையால் சிவமாந்தன்மையை யடைதலாம். சீவனைச் சிவமாகப் பாவித்தல் மலத்தினின்றும் விடுபடுதற் பொருட்டாம்.

நானென்பதற்று:-

நான் என்ற பேதம் தற்பேதம் அறவே அழிந்தாலன்றி மேற்கூறிய இன்பந் தோன்றாது. நான் செய்கின்றேன்; நான் அனுபவிக்கின்றேன் என்ற எண்ணங்கள் அணுத்துணையுமின்றி நீங்க வேண்டும்.

“யானாகிய என்னை விழுங்கி வெறுந்
  தானாய் நிலைநின்றது தற்பரமே”             -அநுபூதி.