பொழிப்புரை மலைமகளாகிய உமாதேவியாரின் திருமுன்வரை சென்று விரிந்த கல்வியிற் கரையைக் கண்ட புலவர் பெருமானே! தேன் ஒழுகும் கொன்றை மலரைத் தரித்த சிவபெருமான் வணங்கிக் கேட்க குழப்பம் நீங்குமாறு, ஒரு மொழியின் உட்பொருளை உபதேசித்தவரே! வலிய அசுரர்கள் அஞ்சுமாறும், நல்ல அமரர்கள் வாழுமாரும், உமது ஆற்றலைக் காட்டிய மயில் வீரரே! வள்ளிக் கொடி படர்கின்ற வள்ளிமலையிற் சென்று வள்ளி நாயகியை மணந்துகொண்ட பெருமிதம் உடையவரே! இரவு நேரத்தில் வந்து வில்லையேந்திய வெற்றியுடைய மன்மதன் தாமரை மலர்க் கணையைச் செலுத்துவதானாலும், சந்திரனும், தென்றற் காற்றும் நெருப்பை அள்ளி வீசுவதனாலும், தலைவன் வருவானோ என்ற ஐயத்தையடைந்து, படுக்கையில் மாதர்கள் பழிச்சொல் கூறப்படுகின்ற, இலக்குமி போன்ற இப்பெண், தன் பழவினையால் துன்புறுகிறேன் என்று தன்னைத்தானே வெறுத்துக் கொள்ளாத வண்ணம், தூய வரிகளையுடைய வண்டுகள் சிவந்த தேனைப் பருகித் துள்ளுகின்ற உமது கடப்ப மலர் மாலையைத் தந்து அருள் செய்ய வேண்டும். விரிவுரை இத் திருப்புகழ் அகப்பொருள் துறையில் பாடப்பெற்றது. நற்றாயிரங்கல் என்ற துறையில், நாயகனை விரும்பி வேட்கை கொண்டு வாடி வருந்துந் தன் மகளைக் குறித்துத் தாய் இரங்குகின்றதாக அமைந்தது. அல்லசலடைந்த:- அல் அசல் அடைந்த. அசல்-அயல், (அருகு) இரவில் அருகில் வந்த மன்மதன் இரவில் ஆட்சி செய்வான். வில்லடநலங்கன்:- கரும்பு வில்லையேந்தி, ஆற்றல் படைத்த மன்மதன். அங்கம் இல்லாதவன் அநங்கன். அள்ளியெறி சிந்த பிள்ளைமதி தென்றல்:- தலைவன் மீது வேட்கை கொண்ட தலைவிமீது, சந்திரனும் தென்றலும், நெருப்பை அள்ளி வீசுகின்றது போன்ற துன்பத்தைச் செய்கின்றன. |