ஒளவையார், “புலவீர்! இதைப் பெறுந் தகுதி எனக்கு இல்லை. புலவர்கள் என்றால் தேவரைக் குறிக்கும். அப்புலவர்களாகிய தேவர்க்கு அதிபதி இந்திரன். இந்திரன் ஐந்திரம் என்ற வியாகரனத்தைச் செய்தவன். அவன்பால் சென்று இதனைக் கொடுங்கள்” என்றார். எல்லோரும் இந்திரனிடம் போய் இதைக் கூறித் தாம்பூலத்தை நீட்டினார்கள். இந்திரன் அஞ்சினான். “ஒரு வியாகரண நூலைச் செய்ததனால் மட்டும் ஒருவன் சகல கலாவல்லவனாயாகி விடுவனோ? அகத்தியர்தான் பெரும்புலவர். அவரிடம் சென்று இதைக் கொடுப்பீராக” என்றான். அனைவரும் சென்று, “தலைமைப் புலவர் நீர். இவ்வித்வ தாம்பூலத்தைப் பெற்றுக் கொள்ளும்” என்றார்கள். அகத்திய முனிவர் புன்முறுவல் செய்து, “நன்று கூறினீர்கள். நான் தலைமைப் புலவன் ஆவேனோ? சகலகலாவல்லி கலைமகளே யாகும். அப்பெருமாட்டியிடம் போய் இதைச் சமர்ப்பணஞ் செய்யுங்கள்” என்றார். எல்லோரும் வாணிதேவியிடம் போய், “இந்த வித்வதாம்பூலம் உமக்கே உரியது; பெற்றுக் கொள்ளும் என்றார்கள். கலைமகள் நிலை கலங்கி, “நான் இத்தாம்பூலத்துக்கு உரியவள் ஆகேன். என் கணவரே உரியவர். அவர் வேதத்தில் வல்லவர். அவருக்கு இதைத் தருவது முறைமை” என்றார். பிரமதேவனிடம் போய் “இது சிறந்த புலவர்க்கு உரிய தாம்பூலம்; நீர் பெற்றுக் கொள்ளும்” என்றார்கள் பிரமதேவர், அம்மம்ம! நான் புலவனோ? அன்றன்று. வாகீசுவரி, ஞானேசுவரி, ஞானாம்பாள் உமாதேவியார்தான். அப்பரமேச்வரிக்குத்தான் இது உரியது. ஆதலால் அம்பிகையிடம் போய்க் கொடுங்கள்” என்றார். திருக்கயிலாய மலைசென்று எல்லோரும் வணங்கி, “தேவீ! பரமேச்வரி! ஞானாம்பிகையே! இது வித்வ தாம்பூலம். இது உமக்கே உரியது” என்றார்கள். உமாதேவியார், “நன்று நன்று; நான் இதற்கு உரியவள் அன்று. என் குமாரன் ஞானஸ்கந்தன், ஞானபண்டிதன், சிவகுருநாதன், அம்முத்துக்குமார சுவாமியே இதற்குரியவன்” என்று அருளிச் செய்தார். |