எல்லோரும் கந்தகிரிக்குச் சென்று, “முருகா! மூவர் முதல்வா! இது வித்வ தாம்பூலம். இதனைத் தேவரீர் ஏற்றருளும்” என்று வேண்டி நின்றார்கள். “நல்லது” என்று முருகப் பெருமான் அத்தாம்பூலத்தை ஏற்றுக் கொண்டருளினார். அதனால் அவர் சகல கலா வல்லவர்! மலைமங்கை வரைக்கும் போய், அந்த அம்மையார் எம் புதல்வனே கல்வி கரைகண்டவன் என்று குறித்தபடியால், “கல்லசலமங்கை எல்லையில் விரிந்த கல்விகரைகண்ட புலவோன்” என்று அருணகிரியார் பாடுகின்றார். கள்ளொழுகு கொன்றை வள்ளல்:- கொன்றை மலர் ஐந்து இதழ்களையுடையது.அது ஐந்தெழுத்தைக் குறிக்கும். அதன் இடையே வளைந்திருக்கின்ற தோகை பிரணவத்தைக் குறிக்கும். அது சிவபெருமானுக்கே உரிய மலர். “கொன்றைச் சடையர்க் கொன்றைத் தெரியக் கொஞ்சித் தமிழைப் பகர்வோனே” -(அம்பொத்த) திருப்புகழ். எல்லாவற்றையும் அடியவர்க்கு வழங்குவதால் வள்ளல் எனப்பட்டார். “வள்ளிக்கணவன் றனையீன்ற வள்ளல்பவனி வரக்கண்டே” -திருஅருட்பா. கருத்துரை வள்ளிமலை யாண்டவனே! என் புதல்விக்கு உனது கடப்ப மலர் மாலையைக் கொடுத்தருள்வீர். குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை குயில்போற்ப்ர சன்ன மொழியார்கள் குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்னை குருவார்த்தை தன்னை யுணராதே இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய இடர்கூட்ட இன்னல் கொடுபோகி |