பொழிப்புரை வட நாட்டில் உள்ள வெள்ளி மலையைக் காத்து, புள்ளி மயில்மீது விளங்குகின்ற குமாரக் கடவுளே! அழகு நிறைந்த வள்ளி நாயகியின் திருவடியைப் புகழ்ந்து, வள்ளிமலையில் அவருடைய சமயம் பார்த்து நின்ற நல்ல மணவாளரே! அடியேன் முன்னாளில் செய்த குற்றங்களைப் பொறுத்து அவைகளை நீக்கி, அடியேன் உமது திருவருளைப் போற்றுகின்ற சீலத்தைத் தந்த பெருவாழ்வே! உமது திருவடியைப் போற்றித் தாமரை மலரைச் சென்னியில் சூட்டவல்ல அடியார்க்கு இனியராக விளங்கும் பெருமிதம் உடையவரே! இல்லற வாழ்வு, தாய், மனைவி, மக்கள், குயில் போன்ற மொழியுடன் எதிர்ப்படுகின்ற புதல்வியர் குலம், வாய்த்த இனிய செல்வம் இவையெல்லாம் எனக்கு இருக்கின்றன என்ற ஆணவத்தைக் கொண்டு குருநாதரின் உபதேசமொழியை உணர்ந்தறியாமல், வாழ்நாளைக் கழிக்க, கொடிய எமன் நெருங்கி தளர்வுறுமாறு துன்பத்தைக் கொடுக்க துயருடன் என்னைக் கொண்டுபோய், சுடுகாட்டில் சுடுவதற்கு முன் உமது திருவடிகளை உணர்ந்து உய்வேனோ? விரிவுரை குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை குயில்போல் ப்ரசன்ன மொழியர்கள் குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்த தென்ன:- சிறந்த வாழ்க்கை, தாய், மனைவி, மக்கள், மகள், குலம், நல்ல செல்வம் முதலியன நமக்கு வாய்த்துள்ளதென்று மனிதன் தருக்கு அடைகின்றான். அங்ஙனம் தருக்குற்று இறுமாந்து செய்வன தவிர்வன தெரியாது நிற்பான். குருவார்த்தை தன்னை மறவாதே:- குருநாதர் மனித வுருவெடுத்த தெய்வம். குருநாதனை மனிதனாக எவன் எண்ணுகின்றானோ அவன் நற்கதியடையான். ஆதலால் குரு வார்த்தைக்கு மறுவார்த்தை நினைக்கக் கூடாது. இடநாட்கள்:- பிரமதேவன் தந்த வாழ்நாட்கள் அத்தனையும் அவமே கழிந்தன. |