வெய்ய நமனீட்டி:- வெப்பமான சீற்றமுள்ளஇயமன் ஓலையை நீட்டி வருவான். தொய்ய இடர் கூட்ட:- தளர்ச்சியடையும்படி உயிரைப்பற்றித் துன்பத்தை செய்வான். இன்னல் கொடு போகி:- சுற்றத்தார்கள் மிகுந்த துன்பத்துடன் உடம்பை எடுத்துக் கொண்டு போவார்கள். இடுகாட்டிலென்னை யெரியூட்டு முன்னு னிருதாட்கள் தம்மை யுணர்வேனோ:_ அருமையிலும் அருமையாக, நேரங் கடவாமல் உயர்ந்த வுணவுகளையுண்டு வளர்த்த இந்த உடம்பு ஒரு நொடியில் தியில் வெந்து சாம்பராகி மறைந்து ஒழிகின்றது. “ஒளிருமின லுருவதென ஓடியங்கம் வெந்திடுவேனை” -(ஒருவரையும்) திருப்புகழ். முருகா! இவ்வாறு அடியேன் எரியில் கரியுமுன் உமது திருவடியை உணர்ந்து உய்ய அருள் செய்” என்று சுவாமிகள் வேண்டுகின்றார். வடநாட்டில் வெள்ளி மலை காத்து:- வடநாட்டில் உள்ள வெள்ளி மலையான திருக்கயிலாயத்தில், கோபுர வாசலில் முருகன் இருந்து காத்தல் செய்கின்றார். அடிநாட்கள் செய்த பிழை நீக்கி யென்னை அடிபோற்றும் வண்மை தரும் வாழ்வே:- அருணகிரிநாதர் தன் வரலாற்றை இதில் குறிப்பிடுகின்றார். அருணகிரிநாதர் இளமையில் உலக நெறியில் சென்று செய்த பிழைகளையெல்லாம் பொறுத்து, நீக்கி சதா தன்னைப் பாடும் அருள் திறத்தை அருள் புரிந்தார் முருகப் பெருமான். அடிபோற்றியல்லி முடிசூட்டவல்ல அடியார்க்கு நல்லபெருமாளே:- பூவினில் சிறந்தது தாமரைப் பூ. அதனால் பிரமதேவர், இலக்குமி, வாணி, முருகவேள் முதலிய மூர்த்திகள் தாமரையை உறைவிடமாகக் கொண்டார்கள். திருமாலும் திருவீழிமலையில் தினமும் ஆயிரந் தாமரைப் பூக்களால் சிவபெருமானை அருச்சித்து வழிபட்டார். |