“பூவினுக்கு அருங்கலம் பொங்குதாமரை” -அப்பர். நல்ல தாமரை மாலையை முருகனுடைய திருவடியில் சூட்டுகின்ற அடியார்க்கு முருகன் நல்லவராகத் திகழ்கின்றார். “அடியார்க்கு நல்ல பெருமான் அவுணர்குல மடங்கப் பொடியாக்கிய பெருமான்” -கந்தரலங்காரம். கருத்துரை வள்ளி நாயகனே! மரணமடையுமுன் உன் சரணமடைய அருள் செய்யும். சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ் சலமென்பு திண்பொருந் திடுமாயம் சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந் தழலின்கண் வெந்துசிந் திடஆவி விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந் துயர்கொண்ட லைந்துலைந் தழியாமுன் வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம் வினவென்று அன்புதந் தருள்வாயே அரவின்கண் முந்துயின் றருள்கொண்ட லண்டர்கண் டமரஞ்ச மண்டிவந் திருசூரன் அகலம் பிளந்தணைந் தகிலம் பரந்திரங் கிடஅன் றுடன்றுகொன் றிடும்வேலா மரைவெங் கயம்பொருந் திடவண் டினங்குவிந் திசையொன்ற மந்திசந் துடனாடும் வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம் வரநின்று கும்பிடும் பெருமாளே. பதவுரை அரவின் கண்=ஆதிசேடன் மீது, முன் துயின்று அருள்=முன்பு அறி துயில்புரிந்து உலகங்கட்கு அருள் செய்கின்றவரும், கொண்டல்=நீல மேகம் போன்றவரும் ஆகிய திருமாலும், அண்டர்கள்=தேவர்களும், கண்டு அமர் அஞ்ச=பார்த்து போருக்கு அஞ்சும்படி, மண்டி வந்திடு சூரன் அகலம் பிளந்து=நெருங்கி வந்த சூரபன்மனுடைய மார்பைப் பிளந்து, அனைந்து அகிலம்பரந்து இரங்கிட=அவன் அலரி விழும் ஒலி எங்கும் பொருந்தி பரவி ஒலிக்க, அன்று உடன்று கொன்றிடும் வேலா=அந்நால் போர் புரிந்து கொன்ற வேலவரே! மரைவெம் கயம் பொருந்திட=தாமரை |