பக்கம் எண் :


408 திருப்புகழ் விரிவுரை

 

மலர் விரும்பத் தக்க குளங்களில் பொருந்த, வண்டு இனம் குவிந்து=வண்டின் கூட்டங்கள் நிறைந்து, இசை ஒன்ற=இசை ஒலிக்க, மந்தி சந்து உடன் ஆடும்=குரங்குகள் சந்தனமரங்களில் விளையாடுகின்ற, வரையின் கண் வந்து=வள்ளி மலையில் வந்து, வண் குற மங்கை= வன்மையான குற மகளாகிய வள்ளி பிராட்டியின், பங்கயம் வர நின்று=தாமரை போன்ற பாதம் வருவதைக் கண்டு, கும்பிடும்=கும்பிட்ட, பெருமாளே=பெருமையிற் சிறந்தவரே! சிரம் அங்கம்=தலையாகிய உறுப்பு, அம் கை கண் செவி=அழகிய கரம், கண், காது, வஞ்ச நெஞ்சு=வஞ்சகத்துக்கு அடமாம் நெஞ்சு, செம்சலம்=சிவந்த நீராகிய உதிரம், என்பு=எலும்பு ஆகிய இவைகள், திண் பொருந்திடு மாயம்=வலிமையாகப் பொருந்தியுள்ள மாயமான இந்த உடம்பு, சில துன்பம் இன்பம் ஒன்றி வந்து இற=சில துன்பங்களும் இன்பங்களும் பொருந்தி முடிவு காலம் வந்து சேர, பின்பு செம் தழலின் கண் வெந்து=பின்னர் செவ்விய தீயில் வெந்து, ஆவி சிந்திட=உயிர் பிரிதலுறும்படி, விரை வின் கண் அந்தகன் பொர=வேகமாக எமன் போர் செய்ய, வந்தது என்று=வந்துவிடான் என்று, வெம் துயர் கொண்டு=வெப்பமான துக்கத்தைக் கொண்டு, அலைந்து உலைந்த அழியா முன்=அலைந்தும் நிலைகுலைந்தும் அடியேன் அழிவதற்குமுன் வினை ஒன்றும் இன்றி=வினைகள் யாவும் தொலைந்து, நன்று இயல் ஒன்றி=நல்ல செயல்களைப் பொருந்தி, நின்பதம்=உமது பாதங்களை, வினை என்று அன்பு தந்து அருள்வாயே=கேட்டு ஆராய்ந்து அறிகின்ற அன்பினை வழங்கி அருள் புரிவீராக.

பொழிப்புரை

ஆதிசேடன் மீது முன் அறிதுயில் கொண்டு உலகங்கட்கு அருள் புரிகின்றவரும், நீலமேக வண்ணரும் ஆகிய திருமாலும் தேவர்களும் கண்ட போரில் அஞ்சுமாரு நெருங்கி வந்த சூரபன்மனுடைய மார்பு பிளந்து, பொருந்திய எல்லா இடங்களிலும் அவன் அலறிய ஒலி பரந்து ஒலிக்க அன்று போர் புரிந்து வதைத்த வேலாயுதரே! தாமரை விரும்பத்தக்க குளங்களில் பொருந்த, வண்டுக் கூட்டங்கள் நிறைந்து இசை ஒலிக்க, குரங்குகள் சந்தன மரத்தில் விலையாடும் வள்ளி மலையின்கண் வந்து வளமையான வள்ளியம்மையின் பாதம்வரக் கண்டு கும்பிட்ட பெருமிதம் உடையவரே! தலை, அழகிய கை, கண், காது, வஞ்சம் நிறைந்த நெஞ்சு; சிவந்த இரத்தம், எலும்பு முதலிய உறுப்புக்கள் வலிமையாகப் பொருந்திய மாயமான இத்தேகமானது, சில துன்பமும் இன்பமும் பொருந்தி முடிவில் மரணகாலம் வந்தபோது, செவ்விய நெருப்பில் வெந்து உயிர் பிரியும் படி, இயமன் வேகமாக வந்து போரிட வந்துவிட்டான் என்று கொடிய துக்கத்தைக் கொண்டு, அலைந்தும் உலைந்தும் அழிவதற்கு முன், வினைகள் யாவும் தொலைந்து, நல்ல செயல்களைப் பொருந்தி, உமது பாதத்தை ஆராய்ந்து அறியும் அன்பை எனக்கு என்று அருள் புரிவீரோ?