பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 409

 

விரிவுரை

சிரமங்க மங்கைகண் செவி வஞ்ச நெஞ்சு செஞ்சலன்பு திண்பொருந்திடு மாயம்:-

இந்த உடம்பு, தலை, கை, கண், காது, நெஞ்சு, உதிரம், எலும்பு முதலிய உறுப்புக்களுடன் கூடியது. அந்தந்த உறுப்புக்கள் இந்த உடம்பில் உறுதியாக அமைக்கப்பட்டுள்ளன. அப்படி அமைத்தவன் இறைவன். அற்புதமான இயந்திரம் இவ்வுடம்பு. இதற்குள் எத்தனை எத்தனையோ கருவிகளை அமைத்திருக்கின்றான். எல்லாப் பூட்டுக்களிலும் பசை நாம் இருக்கின்றவரை இருந்து, கைகால் முதலிய சந்திகள் அசைந்து அசைந்து வேலை செய்ய உதவுகின்றது.

பிறகு உடம்பு மாயமாக மறைந்து விடுகின்றது. அதனால் மாயம் என்றார்.

சில துன்ப மின்ப மொன்றிற:-

இற-இற்றுப்போக; முடிவு அடைய.

இந்த உடம்பில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன.

கடலில் மாறி மாறி அலைகள் வருவதுபோல் என அறிக.

தழலின்கண் வெந்து சிந்திட ஆவி:-

பெறுதற்கரிய பிறவி இம்மானுடப் பிறவி. இது வறிதே நெருப்புக்கு இரையாகின்றது. இதனால் ஆய பயனைப் பெற்று விட்டால் உடம்பு அழிவதனால் கவலையில்லை. உணவு உண்ட பின் வாழையிலையைத் தூக்கியெறிவதுபோல், ஆன்மலாபம் பெற்ற பின் உடம்பு நீங்கினால் துன்பமில்லை. கரும்பின் சாறு போனபின் சக்கை எரிவதனால் துன்பமில்லை.

வினை யொன்று மின்றி:-

வினையால் உடம்பு மீள மீள வந்து கொண்டிருக்கும்.

      “விதி காணுமுடம்பை விடா வினையேன்”      -கந்தரநுபூதி.

வினைப்போகமே இந்த உடம்பு.

வினை முற்றினாலும் அற்றாலன்றி பிறவி நீங்காது. ஆகாமியம், பிராரப்தம், சஞ்சிதம் ஆகிய மூன்று வினைகளும் அற்றுப் போக வேண்டும். அதனால் “வினை ஒன்றும் இன்றி” என்று அருளிச் செய்தார்.