பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 41

 

மூர்த்தியின் திருமகரே! தாமரை மலர் போன்ற வடிவுள்ள திருக்கரத்தில் வேலையேந்திய குமாரக் கடவுளே! குகை வழியே வந்து, மலையாகிய சிகரத்தையுடைய திருவேங்கட மலைமீது எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே! கருமையான தலை மயிர் நரைத்தும், செழித்த இருகண்கள் குழிந்தும், கன்னத்தில் உள்ள சதைகள் வற்றியும், காதுகள் தோலாகித் தொங்கியும், கழுத்தின் அடிப்பகுதி முழுதும் வளைந்தும், நீண்டு வலிமையாயிருந்த முதுகு கூனலாகியும், தாடையில் உள்ள பற்கள் உதிர்ந்தும், உதட்டில் எச்சில் நீர் ஒழுகியும், தூக்கம் வரும்போது, எலும்புகள் அப்படியே குலுங்குமாறு இருமல் வந்தும், உரத்த-வலிய குரல் நடுங்கியும் தடி ஊன்றியும், நடை தடுமாறியும், உடம்பு முதுமைப் பருவத்தை யடையுமுன்னர், தேவரீருடைய திருத்தொண்டர்கட்கு அடியேன் மிக்க அன்புடன் தொண்டு செய்ய மாட்டேனோ?

விரிவுரை

இத் திருப்புகழில் இளமை நிலையாமையைப் பற்றி அடிகளார் அழகாக எடுத்து உரைக்கின்றார். நரை திரை மூப்பு ஆகிய இவைகளால் இந்த உடம்பு பெருந் துன்பம் எய்தும்.

மிக்க விரும்பி உனக்கடிமை படுமவர் தொண்டு புரிவோனே:-

இறைவனுடைய திருத்தொண்டர்கட்கு மிகுந்த நேசத்துடன் தொண்டு புரிவதே முத்தி பெறுவதற்கு எளிய வழியாகும். தொண்டர்க்குத் தொண்டு புரிவோர் எல்லா நலன்களையும் எளிதிற் பெறுவர்.

இறைவனுக்குத் தொண்டு புரிவது ஒரு மடங்கு பயனும் தொண்டர்க்குத் தொண்டு செய்வது இருமடங்கு பயனும் விளைவிக்கும். ஏனெனில், தொண்டர் உள்ளத்தில் இறைவன் உறைகின்றான் ஆதலின் இருமடங்காகின்றது. மானக் கஞ்சாற நாயனாரைப் பற்றிக் கூறவந்த சேக்கிழார் பெருமான், அவருடைய அடியாரின் அடித்தொண்டினைக் கூறும் திறங் காண்க.

பணிவுடைய வடிவுடையார் பணியினொடும் பனிமதியின்
அணிவுடைய சடைமுடியார்க் காளாகும் பதம்பெற்ற
தணிவில்பெரும் பேறுடையார் தம்பெருமான் கழல்சார்ந்த
துணிவுடைய தொண்டர்க்கே ஏவல்செயுந் தொழில் பூண்டார்.
                                                        -பெரியபுராணம்.