யின் அன்பு விடாத மனமுடைய நல்ல அடியார்க்கு அடியேனும் சமமாகி உய்யும்படி உமது திருவருளைத் தந்தருளுவீர். விரிவுரை அகத்தினைக் கொண்டு:- அகம்-நான். நான் என்ற அகப்பற்று. மற்றொன்றுற்றறியாது:- அவ நெறியன்றி, மற்றச் சிவ நெறியை யடைந்து உய்ய அறியாது. அவத்துள் வைக்கும்:- அவம்-பயனற்றது. பயனில்லாத செயலில் வைப்பவன் மன்மதன். இகத்தை மெய்க் கொண்டு:- மறுமையும் வீடுபேற்றையுங் கருதாமல், இம்மை வாழ்வே நிலைத்தது என்று கருதுவது மாந்தர் தொழில். இம்மை, மறுமை, வீடு என்ற மும்மையில் இம்மையே மெய்யென் றெண்ணி இடர்ப்படுகிறார்கள். பாலர்பொன் மயக்கல் உற்று:- மனைவி, மைந்தர், பொன், பொருள் என்ற இவைகளைச் சதமென நினைத்து மயக்கமுறுவர் அறிவிலிகள். இவைகள் யாவும் ஒரு கணத்தில் அழிபவை. “நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வண்மை கடை” -திருக்குறள். அம்பற்றைவிடாது:- சந்தத்தைக் குறித்து பகர மெய் மகர மெய்யாக வந்தது. பற்று விட்டாலன்றி பிறவி தொலையாது. “அற்றது பற்றெனில் உற்றது வீடு” -நம்மாழ்வார். இளைப்பிரைப்பும் பித்தமுமாய் நரை முதிர்வாயே:- இளைப்பு என்பது ஒரு நோய். இது காசத்தைச் சேர்ந்தது. இரைப்பு-அதிகமாக மூச்சு விடுகின்ற நோய். பித்தம்-பாண்டு. மயக்க முதலிய துயரங்களைச் செய்கின்ற நோய். |