இந்த நோய்களால் துன்புற்று, நரைத்து திரைத்து முதுமையாகி ஆன்மாக்கள் துன்புறும். எமக்கயிற்றின் சிக்கினிலாமுன்:- ஆயுள் முடிந்தவுடன் கூற்றுவன் பாசக் கயிற்றால் உயிரைப் பிணித்துக் கொண்டு போவான். அந்த இடர்ப்பாடு வருமுன் இறை பணி செய்து உய்யவேண்டும். பத்திவிடாமன திருக்கு நற்றொண்டர்க் கிணையாகவுனருள் தாராய்:- அடியார்கள் இறைவன் திருவடியில் நீங்காத அன்புடன் இருப்பார்கள். “பெருநதியணியும் வேணிப் பிரான்கழல் பேணிநாளும் உருகிய அன்புகூர்ந்த சீந்தைவார் ஒழுக்கமிக்கார்” என்று குங்கலியக் கலய நாயனாரது அன்பின் திறத்தைச் சேக்கிழார் பெருமான் கூறுகின்றார். இத்தகைய திருத் தொண்டருடன் கூடி, அவர்களின் கருணையால் அவர்களுக்கு நிகரான அன்புடையராய் உயர்தல் வேண்டும். புகழ்ச்சிலைக் கந்தர்ப்பன்:- கந்தர்ப்பன்-மன்மதங் ஆசையை விளைவிக்கின்ற மன்மதனை நெற்றிக் கண்ணால் பார்த்து சிவபெருமான் எரித்தருளினார். மும்மலக்காரியமாகிய முப்புரத்தைச் சிரித்து விளையாட்டாக எரித்தருளினார். புவிக்குள் யுத்தம்...........பகை புகட்டி வைக்கும் சக்கிரபாணி:- “நீ பாரத வமரில் யாவரையும் நீறாக்கிப் பூபாரந் தீர்க்கப் புகுந்தாய் புயல்வண்ணா” என்று கண்ணன் தூதில் சகதேவன் கூறியபடி, கண்ணனுடைய அவதார நோக்கம் பூபாரந் தீர்ப்பது. அதற்குக் கருவி பாண்டவர்கள். பகவான் கிருஷ்ணர் பாண்டவர்க்கும் கௌரவர்கட்கும் பகை மூளச் செய்து, தானே விஜயனுக்குத் தேரோட்டி அரச குலம் யாவும் அழியச் செய்து நிலத்துக்கு நலஞ் செய்தார். கிருஷ்-தோண்டுவது. இச்சொல் நிலத்தைக் குறிக்கின்றது. ந-நலம். |