பக்கம் எண் :


42 திருப்புகழ் விரிவுரை

 

சிறுத்தசெலு......கொணர நிவந்த:-

செலு-மீன் சிறை.

சோமுகன் என்ற அரக்கன் பிரமதேவர்பாலிருந்த வேதங்களை அவர் அறியாவண்ணம் கவர்ந்து சென்று கடலில் ஒளித்து வைத்தான் திருமால் கடலில் மீனாக அவதரித்து சோமுகனைக் கொன்று, நான்கு வேதங்களையும் கொணர்ந்து பிரமதேவர்பால் தந்து அருள் புரிந்தார்.

ஏ செறித்தவளை கடலில் வரம்பு புதுக்கி:-

ஸ்ரீராமர்* திருப்புல்லணையில் சாய்ந்து ஏழு நாட்கள் வருணனை வழிபடவேண்டி மனம் ஒருமைப்பட்டுக் கிடந்தார். வருணன் வெளிப்படாமை கண்டு வெகுண்டு கடல்மீது பாணத்தை விடுத்தார். கடல் வெந்தது. வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து, ஸ்ரீராமரைத் தஞ்சம் புகுந்து, “பெருமானே! புறக் கடலில் இரு பெரிய திமிங்கலங்கள் புரிந்த போரை மாற்றிச் சமாதானஞ் செய்யும் கருமத்தில் ஈடுபட்டிருந்தேன் அதனால் நீங்கள் நினைத்ததை உணர்ந்தேனில்லை. மன்னித்தருள்க. கடலில் அணைகட்ட அடியேன் உதவுகின்றேன்” என்று கூறி வேண்டிக் கொணடான்.

பின்னர் ராமர் “நளன்” என்ற வானர வீரனைக் கொண்டு, ஏனைய வானரங்கள் மலைகளைக் கொணர்ந்து கொடுக்க சேது பந்தனம் புரிந்தார்.

குகைவழி வந்த மலைச்சிகர வடமலை:-

முருகப் பெருமான் ஒரு சமயம் ஒரு திருவிளையாடலை யுன்னி, உமையம்மையாருடன் பிணங்கி, கயிலாய மலையை விடுத்து நீங்கி, பாதலம் போய் அங்கிருந்து, ஒரு குகை வழியே வந்து, திருவேங்கட மலையில் தங்கினார். இதனை, கந்தபுராணம் வழிநடைப் படலத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் கூறுகின்றார்.

அண்ட மன்னுயிர் ஈன்றவளுடன் முனிவாகித்
தொண்டகங் கெழு சுவாமிதன் மாலவரை துறந்து
மண்டு பாதலத் தேகியே ஓர்குகை வழியே
பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான்.


*இராமர் திருப்புல்லணையில் இருந்த திருத்தலம் திருப்புல்லாணி என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது. இராமநாதபுரம் அருகே உள்ளது.