பக்கம் எண் :


420 திருப்புகழ் விரிவுரை

 

பதவுரை

எழுகு நிறை=ஏழு உலகங்களையும் தமது நாபியில் கொண்ட, அரி=நாராயணர், பிரமர்=பிரம்ம தேவர், சோதி இலகும் அரன்=சோதிவடிவாக விளங்கும் உருத்திரன், மூவர் முதலானோர்=இந்த மூவர் முதல் பிற தேவர்கட்கும், இறைவி எனும் ஆதி= தலைவி யென்று சொல்லப் பட்ட ஆதி பராசக்தியாகிய, பரை முலையில் ஊறி எழும்= மேலாய உமதேவியாரது திருமுலையில் ஊறியெழுந்த, அமிர்தம் நாறு=ஞானப்பால் மணக்கும், கனிவாயா=கனிபோன்ற வாயையுடையவரே! புழுகு ஒழுகு காழி=புழுகு வாசனை ஒழுகி நறுமணம் வீசுகின்ற சீகாழிப் பதியில், கவுணியரில் குடியில், ஞான புனிதன் என=ஞானசம்பந்தராக அவதரித்து, தமிழாலே=தமிழ் பாசுரத்தின் மகிமையாலே, ஏடு புனலில் எதிர் ஏற=ஏடானது வையை யாற்றின் நீரில் எதிர் ஏறிச் செல்லவும், சமணர்கழு ஏற=சமணர்கள் கழுவில் ஏறவும், பொருத=தமிழினால் வாதப் போர் புரிந்த, கவிவீர=கவிவீரரே! குருநாதா=குருநாதரே! மழு=மழுவையும், உழை=மானையும், கபாலம்= பிரமகபாலத்தையும், டமரக=உடுக்கையும், த்ரிசூலம்=திரி சூலத்தையும், மணி=மணியையும், கர விநோதர் அருள் பாலா=கரத்தில் ஏந்திய அற்புத மூர்த்தியாம் சிவபெருமான் அருளிய திருக்குமாரரே! மலர் அயனை=தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவனை, நீடு சிறை செய்து=பெரியசிறைச் சாலையில் அடைத்து, அவன் வேலை=அவனுடைய தொழிலாகிய படைப்புத் தொழிலை, வளமை பெறவே செய்=செப்பமாகச் செய்தருளிய, முருகோனே=முருகக் கடவுளே! கழுகு தொழு=கழுகுகள் தொழுகின்ற, வேதகிரி சிகிரி வீறு=வேதமலையின் உச்சியில் விளங்குகின்ற, கதிர் உலவு=ஒளிபொருந்திய, வாசல் நிறைவானோர்=வாசலில் நிறைந்த தேவர்கள், கடல் ஒலியதுஆன=கடலின் ஒலி போல பெரு முழக்கமாக, மறை தமிழர்கள் ஓது=வேதங்களையும், தமிழ்ப் பாடல்களையும் ஓதுகின்ற, கதலிவனமேவு=கதலிவனமாகிய திருக்கழுக்குன்றத்தில் வாழுகின்ற, பெருமாளே=பெருமையின் மிகுந்தவரே!

பொழிப்புரை

ஏழு உலகங்களையும் நாபியில் அடக்கிய திருமால், பிரமர், ஒலியுருவாய உருத்திரர் என்ற இந்த மூவர்கட்கும், பிறதேவர்கட்கும் தலைவியாகிய ஆதிபராசக்தியின் திருமுலையில் ஊறி வெளிப்பட்ட ஞானப்பால் மணக்கும், கனிபோன்ற வாயை யுடையவரே! புழுகு வாசனை வீசுகின்ற சீகாழியம்பதியில் கவுணியர் குடியில் ஞானசம்பந்தராக அவதரித்து, வையையாற்று வெள்ளத்தில் தமிழ்ப்பாசுரம் எழுதிய ஏடு எதிர்த்துச் செல்லவும், சமணர்கள் கழுவில் ஏறவும், வாதப்போர் புரிந்த கவிவீரரே! குருநாதரே! மழு, மான், பிரம கபாலம், உடுக்கை, திரிசூலம், மணி இவைகளைக் கரத்தில் தரித்த அற்புத மூர்த்தியாம் சிவபெருமான் அருளிய திருக்குமாரரே! தாமரை மலரில் வாழுகின்ற பிரமதேவனைச் சிறையில் அடைத்து, அவனுடைய