பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 421

 

தொழிலாகிய சிருட்டித் தொழிலை வளமையாகச் செய்த முருகப் பெருமானே! கழுகுகள் தொழுகின்ற, வேதாசலத்தின் உச்சியில் விளங்கும் ஒளி நிறைந்த தேவர்கள் கடல் ஒலிபோல் வேதங்களையும் தமிழ்ப் பாடல்களையும் ஓதுகின்ற கதலிவனம் என்ற திருக்கழுக்குன்றத்தில் வாழும் பெருமிதமுடையவரே!

விரிவுரை

இத்திருப்புகழ் வேண்டுகோள் எதுவும் இன்றி துதியாக அமைந்தது.

எழுகு நிறை நாபி அரி:-

அரி-பாவங்களைப் போக்குபவர். கு-பூமி; ஏழு என்பது சந்தத்தை ஒட்டி எழு என்று வந்தது. ஏழு உலகங்களையும் தமது வயிற்றில் அடக்கியவர் திருமால்.

       “ஒருபகல் உலகெலாம் உதரத்துட்பொதிந்
          தருமரைக் குணர்வரு மவனை”      -கம்பராமாயணம்.

சோதி யிலகுமரன்:-

ஒளி மயமான உருத்திரர். மூவரில் ஒருவராக வருகின்ற உருத்திரர் வேறு; சிவபெருமான் வேறு.

சிவபிரான் மூவருக்குந் தலைவர். அவரை வேதத்தில் சதுர்த்தம் என்று கூறும்.

       “சிவம் அத்வைதம் சதுர்த்தம்”

           முந்திய முதல் நடு இறுதியு மானாய்
          மூவரு மறிகிலர் யாவர்மற் றறிவார்”            -திருவாசகம்.

உருத்திரரையும் சிவத்தையும் ஒன்றெனக் கருதி இடர்ப் படுவோர் பலர்.

மூவரென்றே யெம்பிரானொடு மெண்ணிவிண்ணாண்டு மண்மேல்
தேவரென் றேயிறு மாந்தென்ன பாவந்திரிதவரே
                                      -(திருச்சதகம்) திருவாசகம்.

மூவர் முதலானோர் இறைவி:-

மூவர்க்குந் தேவர்க்கும் தலைவி உமாதேவியார்.

       “..........................அரனரி
          அயனண்டர்க் கரியாளுமை”         -(சகசம்பக்) திருப்புகழ்.