பக்கம் எண் :


422 திருப்புகழ் விரிவுரை

 

“முதற்றேவர் மூவரும் யாவரும் முகிழ்நகையே” -அபிராமியந்தாதி.

ஆதி பரை முலையினூறி யெழுமமிர்த நாறு கனிவாயா:-

உமாதேவியாரின் திருமுலைப்பால் சிவஞான மயமானது.

ஆதி நாயகன் கருணையாய் அமலமாய்ப் பரம
போத நீரதாய் இருந்தனன் கொங்கையிற் பொழிபால்
ஏதிலாதோர் குருமணி வள்ளமீது ஏற்றுக்
காதன் மாமகற் கன்பினால் அருத்தினான் கௌரி. -கந்தபுராணம்.

புழுகொழுகு காழி:-

சீகாழியில் புழுகு வாசனை எங்கும் நிறைந்துள்ளது. இன்றும் அங்கு சட்டைநாதருக்குப் புனுகு சட்டம் சாத்துகின்றார்கள்.

கவுணியரில் ஞான புனிதனென:-

முருக சாரூபம் பெற்ற அபர சுப்ரமண்ய மூர்த்திகளுள் ஒருவர் சீகாழியிலே கவுணியர் குடியில் திருஞானசம்பந்தராக அவதரித்தருளினார்.

ஏடு தமிழாலே புனலிலெதிரேற:-

திருஞானசம்பந்தரின் திரு அவதாரத்தின் நோக்கம் பரசமய நீக்கமும் சிவசமயம் ஆக்கமுமாம்.

மதுரையம்பதிக்குப் பிள்ளையார் எழுந்தருளி எண்ணாயிரம் சமணர்களுடன் அனல்வாதஞ் செய்து, பின் புனல் வாதஞ் செய்தபோது, “வாழ்க அந்தணர்” என்று தொடங்கும் திருப்பாசுரத்தைப் பாடி, அந்தத் தமிழ் ஏட்டினை வையையாற்றில் இட்டார். அந்த ஏடு எதிரேறிச் சென்றது.

       திருவுடைப் பிள்ளையார்தந் திருக்கையால் இட்டஏடு
       மருவுறும் பிறவியாற்றில் மாதவர் மனஞ் செறாற் போல்
       பொருபுனல் வைகை யாற்றில் எதிர்த்துநீர் கிழித்துப் போகும்
      இருநிலத் தோர்கட்கெல்லாம் இதுபொருள் என்றுகாட்டி
                                                 -பெரியபுராணம்.

இவ்வாறு ஏடு ஆற்றில் எதிரேறியபோது புத்தேளிர் பூமழை பொழிந்தார்கள். பாண்டியன் அற்புதம் அடைந்தான். அமணர்கள் அஞ்சி அஞ்சலி செய்தார்கள். செந்தமிழ் ஆற்றலை உலகவர் உணர்ந்தார்கள்.