பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 423

 

       ஏடுநீர் எதிர்ந்து செல்லும் பொழுதிமை யோர்கள் எல்லாம்
       நீடிய வாழ்த்தில் போற்றி நிமிர்ந்தபூ மாரி தூர்த்தார்
       ஆடியல் யானைமன்னன் அற்புதம் எய்தி நின்றான்
       பாடுசேர் அமணர் அஞ்சிப் பதைப்புடன் பணிந்துநின்றார்.
                                                                         -பெரியபுராணம்.

சமணர் கழுவேற பொருத கவிவீர:-

நாங்கள் தோல்வியுற்றால் கழுவில் ஏறுவோம் என்று சமணர்கள் கூறிய உரைப்படி ஆற்றங்கரையில் கழுக்கல் கட்டி கழுவில் எறினார்கள்.

       பண்புடை அமைச்சனாரும் பாருளோர் ஆற்றால்
       கண்புடைன் பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற
       நண்புடை ஞானம் உண்டார் மடத்துத்தீ நாடியிட்ட
       எண்பெருங குன்றதெண்ணா யிரவரும் எறினார்கள்.
                                                                  -பெரியபுராணம்.

பொருதல்-போர் புரிதல். திருநீற்றினால் ஞானசம்பந்தர் எண்ணாயிரம் சமணர்களுடன் போர் புரிந்தருளினார்.

       “சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக்கால் ஒளிசேர்வெண்
          திருநீற்றால் அமராடும் சிறியோன்”  -(தவர்) திருப்புகழ்.

மழுவுழை கபால டமருகத்ரிசூல மணிகர விநோதர்:-

சிவபெருமான் இடக்கரத்தில் மானும் வலக்கரத்தில் மழுவும் ஏந்தியுள்ளார்.

துள்ளி ஓடுகின்ற மனமாகிய மானையும், அடியார்களது பாவத்தை எரிக்கும் மழுவையும் உடையவர்.

       “மழுமான்கரத்தனை மால்விடையானை       -பட்டினத்தார்.

உடுக்கைநாத ஒலியால் உலகங்களை இறைவன் படைக்கிறான். “தோற்றந் துடியதனில்.”

திரிசூலம்-இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மூன்று சக்திகளைக் குறிக்கின்றது.

மலரயனை நீடு செய்தவன் வேலை வளமை பெறவேசெய்:-

பிரணவத்தின் பொருள் அறியாத பிரமனை செவ்வேள் சிறையில் வைத்து, அவனுடைய சிருட்டித் தொழிலை ஒருமுகமும், நான்கு திருக்கரங்களும், ஜெபமாலையும், கமண்டலமுந் தாங்கித் தாமே செய்தருளினார்.