பக்கம் எண் :


424 திருப்புகழ் விரிவுரை

 

ஒருகரந்தனில் கண்டிகை வடம்பரித் தொருதன்
கரதலந்தனில் குண்டிகை தரித்திரு கரங்கள்
வரதமோ டபயந்தரப் பரம்பொருள் மகனோர்
திருமுகங்கொடு சதுர்முகன் போல்விதி செய்தான். -கந்தபுராணம்.

அகிலவுலகங்கட்கும் தலைவராய் ஐந்தொழில்கட்கும் முதல்வராய முருகவேள் படைப்புத் தொழில் புரிவதில் அதிசயம் ஒன்றுமில்லை.

உயிரினுக் குயிராகியே பரஞ்சுடர் ஒளியாய்
வியன்மறைத் தொகைக் கீறதாய் விதிமுதல் உரைக்கும்
செயலினுக் கெலாம் ஆதியாய் வைகிய செவ்வேள்
அயன் எனப்படைக் கின்றதும் அற்புதம் ஆகுமோ. -கந்தபுராணம்.

முருகப் பெருமான் படைப்புத் தொழில் புரியும்போது உயிர்கள் யாவும் நல்லொழுக்க முடையனவாய், இன்ப நலம் பெற்று மகிழ்ந்திருந்தன.

       “முற்றுமத் தொழி்லிற்பட்ட மூதுயிர் பெற்ற பேற்றை
          இற்றெனக் கிளக்கலாமே எஃகறிவுடையார்க்கேனும்”
                                           - தணிகைப்புராணம்.

கழுகு தொழு வேதகிரி:-

கிருதயுகத்தில்-சண்டன் பிரசண்டன் என்ற கழுகுகளும், திரேதாயுகத்தில்- சம்பாதி சடாயு என்ற கழுகுகளும், துவார யுகத்தில்-சம்புகுத்தன் மாகுத்தன் என்ற கழுகுகளும் பூசித்தன. கலியுகத்தில்-சம்பு ஆதி என்ற கழுகுகளும் பூசிக்கின்றன.

வானோர் கடலொலியதான மறைதமிழ்களோது:-

திருக்கழுக்குன்றத்திலே தேவர்கள் மளைகளாலும், தமிழ்ப் பாடல்களினாலும், இறைவனைக் கடல்போன்ற ஒலிசெய்து துதிக்கின்றார்கள்.

       “முழாவொலி யாழொலி முக்கணாயகன்
          விழாவொலி மணத்தொலி வேள்வியாவையும்
          வழாயவொலி மறைவொலி வானையுங்கடந்
          தெழாவொலி கடல்கிளந்தென வொலிக்குமால்”
                                     -திருக்கழுக்குன்ற தலபுராணம்.

கதலிவனம்:-

இத்தலத்தில் தலவிருட்சம் வாழை. ஐந்தாந் திருவிழாவில் வாழை விருட்ச வாகனத்தில் இறைவன் எழுந்தருளுகின்றார்.