பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 427

 

பொழிப்புரை

(சூராதி யவுணர்களுடைய) பூமாலையை யணிந்துள்ள தலைகள் உதிரக் கொதிப்புற்று சிவப்புறவும், (ஊனுண்டு சிவந்த) வேல்போன்ற கூர்மையான பற்கள் வெளுப்புறவும், வெற்றி பெற்ற புயங்கள் மிக்க கறுப்புறவும், போர்க்களத்தில் எதிர்ந்த சூரபன்மன் மார்பும் மற்ற உறுப்புக்களும் நெரிந்து கரியவும், பேய்கள் கூட்டங் கூட்டமாகக் குதிக்கவும், நிணங்கள் குவியவும், அசுரசேனைகள் வாய்புதைத்து “ஐயோ” என்று அலறிவிழவும் உதிரவெள்ளம் ஓடவும், கடல் வற்றவும், அத்தகிரி முதலியவை இடிந்து விழவும், முனிவரும் தேவரும் “ஐயோ” என்று துதி செய்யவும், வேலாயுதத்தை எடுத்து நடந்த சிவசூரியரே!  மலைப் பக்கத்தில் வாழும் வள்ளிநாயகியாரைத் திருமணங் கொண்ட புயமலையை யுடையவரே!  தமிழ் வழங்கும் வேதாசலத்தில் வாழும் கருணாகரரே! சிலகுமாரரே! (கூந்தலிலிருந்து) ஒலிடு்கின்ற வண்டுகள் சத்திக்கவும், தலையலங்காரம் மின்னவும், ஒலி பெற்ற காற்சிலம்பு அரற்றவும், காமலீலையின் எண்ணத்தால் நெஞ்சில் படபடப் புறவும், வேர்வை மிகவும், மயிர் சிலிர்க்கவும், மன்மதன் உள்ளத்திலிருந்து குதிகொள்ளவும், உடம்பு விரிவதுபோல் துன்புறவும் முத்தாரங்களை யணிந்து தழுவுகின்ற விலைமாதருடைய ஆசையால் அவர்களைக் கலந்து அவமே திரிந்து பிறவிப் பெருங்கடலில் அழுந்திய அடியேன் அதனின்றும் கரை சேர்ந்து உய்ய சடாக்கர மந்திரத்தை உள்ளத்தில தியானித்து, “குகா குகா” என்று வாயார வாழ்த்தி உய்யும் தன்மையைப் பெறமாட்டேனோ?

விரிவுரை

இப்பாடலின் முற்பகுதி விரகதாபத்தாலுண்டாகும் நிகழ்ச்சியைப் பற்றிக் கூறுகின்றது. விழுங்கை-விழுகின்ற கை என்றும் பொருள் கொள்ளலாம். கை- ஒப்பனை எனப் பொருள் கொள்ளப்பட்டது. பிறவிப் பெருங் கடலில் விழுந்த ஆன்ம கோடிகட்குப் பற்றுக்கோடாகத் திகழ்வது ஆறெழுத்தேயாம்.

பிற்பகுதி முருகவேள் வேலெடுத்து நடந்தனால் உண்டாகும் அற்புத நிகழ்ச்சிகளைப் பற்றிக் கூறுகின்றது.

கருத்துரை

வேலாயுதரே!  வள்ளிமணவாளரே!  வேதாசலரே! சிவ மைந்தரே!  மாதர் மயக்குற்று பிறவிக் கடலில் வீழ்ந்தலையும் அடியேன் ஆறெழுத்தை நினைந்து உய்யும் வண்ணம் அருள் புரிவீர்.